ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு இலங்கையில் வீடு கொள்வனவு..! வெளியாகியுள்ள தகவல்
சுகேஷ் சந்திரசேகர், இலங்கை நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு இலங்கையில் வீடு ஒன்றை கொள்வனவு செய்ததுடன், அவருக்காக மும்பையின் உயர்மட்ட ஜூஹூ பகுதியில் உள்ள பங்களாவுக்கு முற்பணம் கொடுத்ததாக இந்திய சட்ட இயக்குனரகத்தின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு வாங்கும் திட்டம்
விசாரணையின்படி சுகேஷ், தனது நண்பரான பிங்கி இரானியிடம் வீடுகளை வாங்கும் திட்டத்தைப் பற்றி கூறியதாகக் கூறப்படுகிறது.
ஜெக்குலின் பெர்னாண்டஸை தனக்கு அறிமுகப்படுத்த பிங்கி இரானியை சுகேஷ் பணித்துள்ளதுடன், அந்த வேலைக்காக அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
மும்பையின் ஜூஹு கடற்கரை பகுதியில் ஜெக்குலினுக்கு வீடு வாங்க பணம் கொடுத்ததாகவும், பஹ்ரைனில் உள்ள நடிகையின் பெற்றோருக்கு ஏற்கனவே ஒரு வீட்டை பரிசாக கொடுத்ததாகவும் சுகேஷ் சந்திரசேகர் பிங்கி இரானியிடம் தெரிவித்தார்.
மேலும், நடிகைக்கு இலங்கையில் வீடு வாங்க பேரம் பேசியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகமவில் சொத்து
இது தொடர்பாக அதிகாரிகள் ஜெக்குலினிடம் விசாரித்தபோது, சுகேஷ் தனக்காக இலங்கையில் உள்ள வெலிகமவில் ஒரு சொத்து வாங்கியதாக ஜெக்குலின் ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், அவர் அந்த சொத்தை பார்க்கவே இல்லை என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. வெலிகம இலங்கையின் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், மேலும் அதன் கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது.
இந்த சொத்து உண்மையில் சுகேஷால் வாங்கப்பட்டதா அல்லது அவர், ஜெக்குலினிடம் பொய் சொன்னாரா என்பதை இன்னும் கண்டறியவில்லை.
அத்துடன் ஜெக்குலின் பெர்னாண்டஸ் அல்லது அவரது உறவினர்களுக்காக சுகேஷ் வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று குற்றப்பத்திரிகை மேலும் கூறியுள்ளது.
சுகேஷ் சந்திரசேகர், ஜெகுலினுக்கு 7 கோடி ரூபாய்க்கு மேல் நகைகளை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.
அவர் பல உயர் ரக கார்கள், விலையுயர்ந்த பைகள், உடைகள், காலணிகள் மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்களை நடிகை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்.