சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு இத்தாலி ஆதரவு
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் மரியா திரிபோடி, சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் மரியா திரிபோடிவுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.
அரசியல் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பது, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் கலாசார மற்றும் கல்விப் பரிமாற்றங்களை வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போதுள்ள உறவு
பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊழலற்ற ஒரு நிலையான தேசத்தை முன்னேற்றுவதற்கான தற்போதைய அரசின் வேலைத்திட்டம் குறித்து பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இத்தாலியுடனான நீண்ட கால நட்பைப் பாராட்டியும் சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்தும் பிரதமர் கருத்துத் தெரிவித்தார்.
இலங்கையின் அண்மைய முன்னேற்றங்களை மரியா திரிபோடி பாராட்டினார்.
அத்துடன் தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு இத்தாலியின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் உள்ளிட்ட இத்தாலிய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர், இலங்கைப் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன, அதே அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் இசூரிகா கருணாரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







