சாரதி அனுமதிப்பத்திர விவகாரம் : இத்தாலி – இலங்கை புதிய ஒப்பந்தம்
இலங்கை மற்றும் இத்தாலி அரசுகளுக்கிடையிலான சாரதி அனுமதிப்பத்திரம் அங்கீகரித்தல் ஒப்பந்தம் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு ஒப்பந்தம் 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டில் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தி தொழிநுட்ப ரீதியான திருத்தங்களை உட்சேர்த்து மீண்டும் வலுவாக்கம் செய்வதற்கு இருதரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அங்கீகாரம்
06 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் இத்தாலியில் வசிக்கின்ற மற்றும் இத்தாலி வதிவிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் இலங்கையில் பெற்றுக்கொண்டுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை பரிமாற்றி இத்தாலி சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் இலங்கையில் வசிக்கின்ற இத்தாலியர்களுக்கு அவர்களுடைய செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமாக வலுவாக்கம் செய்வதற்கான பொறிமுறையை நிறுவுதல் போன்றன குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பர ரீதியாக அங்கீகரிப்பதற்கு இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.