அராலியில் சிறப்பாக நடைபெற்றது பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக நேற்று புதன்கிழமை (17.07.2024) அராலி வடக்கு குலனையூரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வாடிப்பிறப்பு விழா குலனையூர் கலைவாணி சனசமூக நிலையம், கலைவாணி விளையாட்டுக்கழகம் ஆகினயவற்றின் அனுசரணையுடன் ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.
பிரதம விருந்தினராகக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளருமான ச.லலீசன் கலந்து கொண்டிருந்தார்.
கலை நிகழ்ச்சி
இவர்களோடு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன், பொருளாளர் க.கேதீஸ்வரநாதன், கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை.சரவணன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கலைவாணி சனசமூகநிலையத்தின் தலைவர் த.மதுசீலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகி, கலைவாணி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் நே.சாத்வீகனின் நன்றியுரையுடன் நிறைவுற்ற இவ்விழாவில் குலனையூரின் ஏராளமான மக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
மாணவர்களின் ஆற்றுகையில் கலை நிகழ்ச்சிகள் பலவும் இடம்பெற்றிருந்தன. அனைவருக்கும் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் பரிமாறப்பட்டதோடு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
தமிழர்களுக்கே உரித்தான ஒரு பண்பாட்டு அடையாளமான ஆடிப்பிறப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் தற்போது அருகி வந்துள்ளன. இந்நிலையில் மீளவும் அதனை வெகுசனமயப்படுத்தும் நோக்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கிராமமட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஆடிப்பிறப்பைச் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |