காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டமை எனது முடிவு அல்ல - அரசாங்க அதிபர் மகேசன் விளக்கம்
வட மாகாண காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டமை எனது முடிவு அல்ல அதற்குரிய அதிகாரமும் இல்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிப்பத்திரங்கள் அனுராதபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டமை அந்த ஆணைக்குழு மற்றும் அமைச்சின் முடிவே எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வட மாகாண காணி கோப்புகள் தங்கள் அனுமதியுடன் தான் எடுத்துச் செல்லப்பட்டதா? என ஊடகவியலாளர் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் வட மாகணத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் அனுராதபுரத்தில் இருந்தே நடவடிக்கைகள் இடம்பெற்றன.
பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அதற்கான ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டு அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
வட மாகாண காணி சீர்திருத்த அலுவலகம் யாழ்.மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகம் அல்ல. அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெற்று வந்தது.
யாழ்.மாவட்ட காணி சீர்திருத்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு எடுத்துச்செல்லப்படவில்லை.
ஆகவே ஆவணங்களை அனுராதபுரத்துக்கு கொண்டு செல்வதா? இல்லையா ?என்ற முடிவைக்கூட அவர்களே தான் எடுத்திருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.