மகிந்தவின் வேலையை தொடரும் நாமல்! பிள்ளையான் - கருணாவைத் தொடர்ந்து அர்ச்சுனா..
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச மாற்றியுள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(15.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தடை செய்யப்பட்ட அமைப்பை பிரசாரம் செய்வது அவருக்கே நல்லதல்ல.
அர்ச்சுனாவின் உறுதி மொழி
ஏனெனில், தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் சார்பாக அவர் நாடாளுமன்றத்தில் செயற்பட மாட்டேன் என்றும், அரசுக்கு எதிராக சதி செய்யமாட்டேன் என்றும் உறுதி செய்திருக்கின்றார்.
அதையும் மீறி, தடை செய்யப்பட்ட அமைப்பொன்று தொடர்பில் அவர் பிரசாரம் செய்வாரெனில் அது அவருக்குத்தான் நல்லதல்ல.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, அந்த மேடையில் இருந்தவன் என்ற வகையில், அர்ச்சுனா இராமநாதனின் அன்றைய முழு உரையிலும் நான் கண்டுகொண்ட விடயம், வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு அவர் ஒரு முயற்சி செய்து வருகின்றார் என்பது.

தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சகோதரர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காக, அதற்குரிய ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதற்காக அர்ச்சுனா இராமநாதன் முயற்சி செய்து வருகின்றார்.
இந்த நாட்டைப் பிரிக்க எண்ணுபவர்களுக்கு இந்த நடவடிக்கை கண்ணை குத்துகிறது போலும்.
ஆனால், அர்ச்சுனாவின் கடந்த கால வரலாற்றையும், அவர் நாடாளுமன்றத்திற்கு வந்த விதத்தினையும் நோக்கும் போது, அவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழும்.
நிச்சயமாக அவருடைய இந்த மாற்றத்திற்கு ஒரே காரணம், நாமல் ராஜபக்ச தான். வேறு யாரும் இல்லை. அவர்தான் அர்ச்சுனாவை மாற்றியிருக்கின்றார்.

அதேபோல, கருணாவையும், பிள்ளையானையும் மாற்றி அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்து, அவர்களுடைய மக்களுக்கு அபிவிருத்தியைக் காட்டியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான்.
ஆனால் ஒருபோதும் கருணாவோ, பிள்ளையானோ, ஆட்சி மாற்றத்தைக் கோரவோ, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்றோ கோரியதில்லை.
இப்போது அர்ச்சுனாவும் வடக்கை தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்று கேட்கப் போவதில்லை. அந்த நிலையை எற்படுத்தியது நிச்சயமாக நாமல் ராஜபக்சதான். இது ஒரு பாரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.