வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள உருவாக்க 10 வருடங்கள் தேவை: நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்
வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள உருவாக்க 10 வருடங்கள் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் றம்பைவெட்டி கிராமத்தில் குறித்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் அரச அதிபர் சமன்பந்துலசேன, பிரதேச செயலாளர் ந.கமலதாசன் ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டி வைத்துள்ளனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்,
மரநடுகை நிகழ்வுகள் போலியான வகையில் இடம்பெறக் கூடாது. இந்த திட்டம் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்.
மக்களிற்காகவே மரங்கள், எனவே கிராமங்கள், ஆலயங்கள், மைதானங்களிற்கு அண்மையில் மரங்களை நடமுடியும்.
வவுனியாவை பொறுத்தவரை பத்து வருடங்களிற்கு இப்படியான திட்டத்தினை நடைமுறைப்படுத்தினாலேயே காணாமல்போன மரங்களிற்கு ஈடுசெய்யமுடியும்.
தற்போது அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளரின் துரித நடவடிக்கைகளால் ஓரளவு அது கட்டுப்பாடிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த விடயம் தொடரவேண்டும்.
வில்பத்து என்ற இடத்திலும் காடழிப்பு இடம்பெற்றிருந்தது. கேட்டால் குடியேற்றம் என்கிறார்கள். உரிய அதிகாரிகளிடம் கேட்டால் குடியேற்றத்திற்கு உகந்த இடத்தினை ஒதுக்கி கொடுத்திருப்பார்கள். காடுகளை அழித்து அதனை செய்யவேண்டிய தேவையில்லை.
அத்துடன் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் வரும் காலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியினை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சதீஸ்குமார், கிராம சேவையாளர் தர்சன், பொது அமைப்பினர், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டு கிராம மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



