பாதுகாப்பற்ற சிறுவர்களை பாதுகாப்பது நம் மீதுள்ள கடமை
"இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்" என்ற நிலையில் சிறுவர்களை பாதுகாத்து கொள்ளக்கூடிய பொறுப்பு நம் ஒவ்வொரு பெற்றோர், பாதுகாவலர் மீதுள்ள பொறுப்பாகும்.
இருந்த போதிலும் சிறுவர்களுக்கு எதிரான பல துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன.
18 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண், பெண் அனைவரும் சிறுவர்கள் ஆவர். ஐக்கிய நாடுகள் சபையினால் 1959ல் சிறுவர் உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டன. 1989ல் சிறுவர்களுக்கான சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஐக்கிய நாடு சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் இலங்கை 1991ல் கைச்சாத்திட்டது.
இவ்வாறாக ஆரம்பம் தொட்டு தற்கால வரைக்கும் இருக்கின்ற போதிலும் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா என்பதை சற்று உற்று நோக்கினால் கேள்விக் குறியாகவே உள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அண்மைய தகவலின் படி ஆதரவற்ற சிறுவர்கள் தொடர்பில் 912சிறுவர்கள் காணப்பட்ட நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிறுவர்களை பாதுகாக்கும் "சரோஜா" வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 5506 சிறுவர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், துஷ்பிரயோகத்திலிருந்தும் பாதுகாக்கவும் முற்காப்பு நடவடிக்கையாக குறித்த திட்டம் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இது பொலிஸாரின் விசேட நடவடிக்கை கண்காணிப்பு மூலமாக மேற்பார்வை செய்யப்பட்டு இடம் பெறுகிறது.
சிறுவர் துஷபிரயோகம், புறக்கணிப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாத்து அவர்களை பராமரிப்பதற்காக வாரத்து ஒரு தடவை பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகிறது.
ஒவ்வொரு பிரதேச செயலப் பிரிவிலும் சிறுவர் பாதுகாப்பு குழு நியமிக்கப்பட்டும் கடுமையாக தீவிர நடவடிக்கைகள் சிறுவர் விடயத்தில் இடம்பெறுகிறது. அண்மையில் திருகோணமலை நகர் பகுதி உட்பட ஏனைய பொலிஸ் பிரிவிலும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்தர தலைமையில் "சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள்" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களும் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கமான 109,107 இலக்கங்களும் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டு விழிப்புணர்வூட்டப்பட்டது.
இது தவிர தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மூலமாக 1929 அவசர இலக்கம் ஊடாகவும் சிறுவர்கள் தொடர்பான துஷ்பிரயோகங்களை அறிவிக்க முடியும்.
இவ்வாறான நிலையில் இது குறித்து மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் றியால் சாலிஹீன் தெரிவிக்கையில் " சிறுவர் பாதுகாப்பு விடயம் தொடர்பில் கிழக்கில் அதிக கரிசனை காட்டப்பட்டு வருகிறது.
ஒரு முற்காப்பு நடவடிக்கையாக
தற்போதைய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலும் உரிய அரச திணைக்களங்களுடன் இணைந்து சரோஜா வேலைத் திட்டம் ஊடாக கிராமம், வீடு என பாதுகாப்பற்ற சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பெற்று வருகின்றனர்.
அரச அதிகார சபைகள்,கூட்டுத்தாபனங்களை மூட வேண்டும் வீண் விரயம் செலவுகளை தவிர்க்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலை காணப்பட்ட போதிலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அபிவிருத்தி செய்யப்படுவது தொடர்பில் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டம் சிறுவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்கான தரவுகளை யதார்த்தமான தரவுகளாக காணப்படுகிறது.
குறிப்பாக தாய் வெளிநாடு செல்லுதல், கணவன் மனைவி வீட்டில் சண்டை, விவாகரத்து, பொருளாதார கஷ்டம் போன்றவற்றின் காரணங்களால் சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லாமல் துஷ்பிரயோகங்கள் எழுகிறது.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கை தற்போதைய சரோஜா திட்டம் பாராட்டத்தக்கது. இதற்காக சிறுவர்கள் தொடர்பிலான அரச திறுவனங்களும் இணைந்து கைகோர்த்துள்ளது. ஒரு முற்காப்பு நடவடிக்கையாக பொலிஸாரின் உதவியுடன் திறம்பட செயற்பட்டு வருகிறது" எனவும் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தினம் கூட ஒக்டோபர் 01ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதுகாப்பற்ற சிறுவர்கள் என்ற போர்வையில் கல்வியை பெற முடியாத சிறுவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
கட்டாயக் கல்வி என்பதும் மிக முக்கியமானதாக காணப்பட்ட போதிலும் கல்விக்கான வயதில் தொழிலில் ஈடுபடுதல், இளவயது திருமணம் போன்றனவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றன. இது தொடர்பான விழிப்புணர்வுகளை கிராம மட்டம் தொடக்கம், பாடசாலை கல்வி முறை ஊடாக புதிய கொள்கைத் திட்டங்களை கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும்.
இலங்கையில் மொத்தமாக 17,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் இவர்களை எமது ஆட்சிக் காலத்தில் பாதுகாத்து வளமான எதிர்காலத்துக்காக சிறந்த கல்வியை வழங்குவோம் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ் 12 வயதுக்குட்டபட்ட சிறுவர்கள் இனிமேல் ஸ்மார்ட் தொலைபேசி பாவிப்பது தடை செய்யப்படுகிறது அதனை அனுமதிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அநுர அரசாங்கம்
அரசாங்கம் பல்வேறு வகையான வேலைத் திட்டங்களை சிறுவர் பாதுகாப்புக்காக கொண்டு வந்தாலும் அவ்வப்போது மறைமுகமாகவும் நேரடியாகவும் பல துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகி வருகின்றது.
இதனால் பாடசாலை மட்டத்தில் விசேடமாக விழிப்புணர்வுகளை அவர்களது பாதுகாப்பு, உரிமைகள் தொடர்பில் தெளிவூட்ட வேண்டும்.

தாயின் பாசம், தந்தையின் பாதுகாப்பு, உற்றாரின் கனிவு, ஆசிரியரின் வழிகாட்டல், நல்ல ஆலோசனைகள், சிறந்த நண்பர்கள். சிந்திக்கத் தூண்டும் சமுதாயம் இத்தனையும் ஒருங்கே அமைந்த சிறுவர்களை நம் மத்தியில் விரல் விட்டு எண்ணி விடலாம்.
சிறுவர்களே சமுதாயத்தின் உயிர்நாடி. நாளைய நாட்களை அலங்கரிக்கும் மகான்கள் என்ற நிலையில் கொள்கை உருவாக்கங்களை நடைமுறைப்படுத்தவும் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகளை செய்வோருக்கு கடுமையான தண்டனை போன்ற சட்டத்திட்டங்கள் செய்து பாதுகாக்க தேசிய மக்கள் சக்தியின் அநுர அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
எனவே இச்சிறார்களின் உரிமைகள் பேணப்பட்டு தேவைகள் நிறைவேற்றப்பட்டு உரிய முறையில் நடத்தப்படும் போது மட்டுமே இவர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும்.
இவர்களின் ஆளுமை, விழுமியங்கள் என்பவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படல் அவசியம். இது சமூகத்தின் கடனாகும். சிறுவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும், என்ற நோக்கிலேயே சிறுவர் தினம் சர்வதேச ரீதியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.இனிமேல் ஆதரவற்ற பாதுகாப்பற்ற என்ற சிறுவர்கள் இல்லாதளவுக்கு கிழக்கை மாத்திரமல்ல முழு நாட்டையும் மாற்ற வேண்டும். இதற்காக துறை சார் உத்தியோகத்தர்கள், பெற்றார்கள் என பலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
நாளைய தலைவர்களை பாதுகாப்பது
சிறுவர்கள் முகங்கொடுத்து வருகின்ற சமகால அச்சுறுத்தல்களால் பெரும்பாலானவை அவர்களை உடல், உள, ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகின்றன.
இவ்வச்சுறுத்தல்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதன் மூலமே அவர்களை நாளைய தலைவர்களாக, சமுதாய முக்கியஸ்தர்களாக, ஒழுக்க சீலர்களாக உருவாக்க முடியும்.

சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறுவர்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான அச்சுறுத்தல்களில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வாறு துஷ்பிரயோகப் படுத்தப்படும் சிறுவர்கள் குணப்படுத்த முடியாத நோய்களுக்கோ, உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கோ உள்ளாகின்றனர். அதனால் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து தவிர்ந்து கொள்வதற்குத் தேவையான பயிற்சியை அவர்களுக்கு வழங்குவது மிக அவசியமானதாகும்.
அயற் சூழல்களில் ஆரோக்கியமான முறையில் நடந்து கொள்ள பெற்றோர் வாய்ப்பளிக்க வேண்டும். தனது பெற்றோர் குடும்பம் ஆகிய வட்டங்களுக்கு வெளியே சமூகத்தின் பொதுவான போக்கையும் அதன் பண்பாடுகளையும் வழக்குகளையும் விளங்கிக் கொள்ளும் வகையில் சிறுவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.
சிறுவர்கள் தமது ஆரம்பப் பருவத்திலேயே தனது சமூகத்தின் அங்கீகாரங்களை விளங்கிக் கொள்ளவும் சமூகமயப்படவும் கூடிய முறையில் சந்தர்ப்பங்களைத் தாராளமாக வழங்க வேண்டும்.
தனது கற்றல் சூழலோடு சிறந்த முறையில் உறவாடும் பக்குவத்தையும் கனிவையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும். பெரியோர்கள் முன்னிலையில் நடந்து கொள்ளும் முறை, பேசும் முறை, ஒழுக்கம் பேணல். பெரியோரது பேச்சுக்குச் செவிமடுத்தல் முதலான நல்ல பண்புகளைச் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எனவே தான் ஆதரவற்ற நிலை என்ற நிலையில் இல்லாமல் நாளைய தலைவர்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் மீதுள்ள கடமையல்லவா. எதிர்காலத்தில் சிறுவர்களை பாதுகாக்க அனைவரதும் ஒத்துழைப்புக்களை வழங்குவோமாக.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri