வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் கௌரி சங்கரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 13ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணியின் வாதத்தையடுத்து வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாவன சபையின் நிரந்தர உறுப்பினராக இருந்த குலசேகரம் கிருஸ்ணபவன் சட்டரீதியற்ற முறையில் நீக்கியது தொடர்பிலும், சட்ட நீதியற்ற முறையில் செயற்படும் ஆலய பரிபாலன சபை தொடர்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியால் வற்றாளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவர், உபதலைவர், இணைச் செயலாளர்கள், பொருளாளர்களான 1, 2,3,4,5 எதிராளிகள் உட்பட பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இந்த வழக்கின் 1ஆம் 3ஆம் 5ஆம் எதிராளிகள் சார்பில் ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இன்று(27.07.2026) வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழங்கப்பட்ட கட்டாணைகளை நீக்க எதிர்த்தரப்பு சட்டத்தரணியால் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், வழக்கை தாக்கல் செய்தவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதத்தை மறுத்து வழங்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது.
இந்த வழக்கினை தாக்கல் செய்த கௌரி சங்கரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா, சட்டத்தரணி அழகரட்ணம் ஜினோசன், சட்டத்தரணி ஜி. ஏ அருண்ராஜ் மற்றும் சட்டத்தரணி த. சிவானந்தராஜா ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.