ரணிலுக்கு ஆதரவான மொட்டுவின் புதிய கூட்டணி: தீவிரமடைந்துள்ள முரண்பாடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்கும் சில குழுக்களின் நடவடிக்கை பொதுஜன பெரமுனவுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான புதிய கூட்டணியின் நிமல் லான்சா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவு செயலாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகக்கூட்டத்தில், ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சக்களிடம் இருந்து விலகிச் செல்லவேண்டும் என்று முன்மொழிந்திருந்தனர்.
இதனை அடுத்தே இந்த முரண்பாடு தீவிரமாகியுள்ளதுடன் அவர்கள் இருவரும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பொதுஜன பெரமுன கட்சி விலகி இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
இடம்பெற்ற உரையாடல்
இந்தக்கூட்டத்துக்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksha) பங்கேற்கவில்லை. எனினும் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்துக்கு பசில் ராஜபக்ச சென்றிருந்தார்.
இதன்போது அவர், லான்சா மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோரின் கோரிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தம்மை ஒருதரம் வேண்டாம் என்று சொன்னால், அவர்கள் தமக்கு நூறு தரம் வேண்டாம்” என்று பசில் இதன்போது ரணிலிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "பொதுஜன பெரமுனவால் உங்களுக்கு ஆதரவு வழங்கமுடியும். எனினும் அவர்களை நாசக்கார அரசியலில் ஈடுபடவேண்டாம் என்று சொல்லுங்கள்” என பசில், ரணிலிடம் கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
இந்நிலையில், நிலைமையை சரி செய்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |