வடக்கு மாகாண விவசாய பிரச்சினை: சிறீதரனால் ஜனாதிபதியிடம் நேரடியாக கையளிக்கப்பட்ட கடிதம்
வடக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இது தொடர்பில் சிறீதரன் கூறியுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் அதிக நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படும் விவசாய மாவட்டமான கிளிநொச்சியில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆளுகையில் ஏழு நெற்களஞ்சியங்கள் உள்ளபோதும், உரிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாத காரணத்தால் நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் எமது மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை முழுமையாகக் கொள்வனவு செய்யமுடியவில்லை.
இதனால் தென்பகுதியிலிருந்தும் ஏனைய பகுதிகளிலிருந்தும் வருகைதரும் நெல் கொள்வனவாளர்கள், இடைத்தரகர்கள் என்போர் தமது சுயலாபம் கருதி நிர்ணயிக்கின்ற மிகக்குறைந்த விலைக்கே நெல்லை விற்பனை செய்ய வேண்டியுள்ளதால் நெற்செய்கையை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் அந்தரித்து நிற்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இரணைமடு கமக்கார அமைப்பு
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 23 கமக்கார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்பான இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தினால் பெருமளவு விசாயிகளின் பங்கேற்புடன் 2023.06.28ஆம் திகதி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதன் முடிவில், நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்ட மனுவை மேற்கோள் காட்டி கடந்த 2023.07.04ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் ஜனாதிபதியிடம் நேரடியாக கையளிக்கப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டு சிறுபோக நெற்செய்கையில், ஒரு கிலோ நெல்லின் உற்பத்திக்கு ஒரு விவசாயி செலவு செய்துள்ள தொகை 80.00 ரூபா முதல் 89.00 ரூபா வரையாகும். இவ்வாண்டு சிறுபோகத்தில் கிளிநொச்சியில் 16,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு
இந்த நிலையில், ஏக்கர் ஒன்றின் அறுவடை அண்ணளவாக 2 மெற்றிக் தொன் என கணிக்கப்படின், சிறுபோக அறுவடையில் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 32,000 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதன் மூலம் அதன் கீழுள்ள களஞ்சியசாலைகளின் கொள்ளளவுக்கமைய மொத்த அறுவடையின் 1/7 பங்கினையாவது (5,000 மெற்றிக்தொன்) நியாயமான உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய முடியும்.
அரிசி இறக்குமதியால் ஏற்பட்ட நெல்லின் விலை வீழ்ச்சியை எதிர்கொள்ள முடியாத நிலையில் ஏற்கனவே 72,000 ஏக்கர் காலபோக நெற்செய்கை அறுவடைமூலம் கிடைக்கப்பெற்ற நெல்லைக்கூட விற்பனைசெய்யாது தேக்கி வைத்திருக்கும் எமது விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி, மாவட்டம் தோறும் நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலையை உறுதி செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சன் டிவி சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது.. அவரே பகிர்ந்த குழந்தை போட்டோ Cineulagam
