பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது: ஹமாஸ் கடும் எச்சரிக்கை
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது என ஹமாஸ் படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று எதுவும் இல்லை. இஸ்ரேல், தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அது பணயக்கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இஸ்ரேல் இராணுவ தாக்குதல்
இதை தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது.
இந்த போர் 2 மாதங்களை கடந்து நீண்டு வருகிறது.
சர்வதேச நாடுகளின் முயற்சியால் காசாவில் 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் காசா மீதான போரை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்தது.
மேலும், தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், காசாவில் உள்ள போராளிக் குழுவை ஒழிக்க நினைக்கும் இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
நேரடி இராணுவ நடவடிக்கை
இது தொடர்பாக, படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கூறுகையில், "காசா போராளிக் குழுவை ஒழிப்பதற்கான இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும். இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் அல்லது நேரடி இராணுவ நடவடிக்கைகள் பணயக்கைதிகளை விடுவிக்காது.
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது. பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று எதுவும் இல்லை.
இஸ்ரேல், தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அது பணயக்கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |