பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் தொடரும் போர்: ரணில் வலியுறுத்தியுள்ள விடயம்
பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ச்சியாக போர் இடம்பெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி ஊடக மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பணிப்புரை
இதில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் வாழும் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவிப்பு
அந்த வகையில், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் குறித்து தேடிப் பார்க்குமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் எனும் இரு நாட்டுக் கொள்கையை இலங்கை எப்போதும் ஆதரிக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையே முன்னெப்போதும் இல்லாத இந்த தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |