இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நிகழ்த்திய பாலஸ்தீனிய ஆயுதக்குழு:பலர் பலி
இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் மேஜர் ஒருவர் உட்பட 22 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் தாக்குதல்
அந்த அமைப்பு சுமார் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 22 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், 545 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
அவசர ஆலோசனை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரேல் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், Sha’ar Hanegev உள்ளூர் கவுன்சிலின் தலைவரான Ofir Liebstein என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரான Yoav Gallant, ஹமாஸ் இஸ்ரேலுக்கெதிராக போரை ஆரம்பித்து பெரும் தவறு செய்துவிட்டது என்றும், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அனைத்து இடங்களிலும் எதிரியை எதிர்த்து போரிட்டு வருகிறார்கள் என்றும், இஸ்ரேல் இந்தப் போரில் வெல்லும் என்றும் கூறியுள்ளார்.