ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் குடியேற்ற விரிவாக்கம்: இஸ்ரேலுக்கு சர்வதேச எதிர்ப்பு
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், பாலஸ்தீன நிலங்களைக் கையகப்படுத்துவதை எளிதாக்கும் வகையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாலஸ்தீனம், அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கை, மேற்குக்கரைப் பகுதி அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலுடன் இணைப்பதற்கான ஒரு முயற்சியாவும் விமர்சிக்கப்படுகிறது.
கண்டனம் தெரிவித்த வலதுசாலி நிதி அமைச்சர்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், "பாலஸ்தீன அரசு என்ற எண்ணத்தையே நாங்கள் தொடர்ந்து அழிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்களின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் அனைத்து யூதக் குடியேற்றங்களும் சட்டவிரோதமானவை எனக் கருதப்படும் நிலையில், இஸ்ரேலின் இந்த நகர்வு சர்வதேச விதிகளுக்கு சவால் விடுப்பதாக அமைந்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் சொத்துச் சட்டம், நிலத் திட்டமிடல், உரிமம் வழங்குதல் மற்றும் சட்ட நடைமுறையாக்கம் ஆகியவற்றில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கேள்விக்குறியாக மக்களின் எதிர்காலம்
இதன் மூலம், பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான நிலங்களை யூதக் குடியேற்றவாசிகளால் மிக எளிதாக அபகரிக்க முடியும் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேற்குக்கரைக்கான இஸ்ரேலிய உயர்மட்ட இராணுவத் தளபதியின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த நடவடிக்கைகள் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன.

இது பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதுடன், இரு நாட்டுக் கொள்கை மூலம் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலில், இஸ்ரேலின் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் பாலஸ்தீன மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.