உக்கிரமடையும் போர்: சவப்பெட்டிகளில் வருவதா என கலங்கி நிற்கும் இலங்கையர்கள் - சபையில் பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தத்திற்கு உடனடியாக யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த போர் சூழலில் ஒரு இலட்சத்திற்கும் மேல் இலங்கையர்கள் பணி புரிகிறார்கள். அவர்கள் நாட்டுக்கு வேலையை விட்டு வருவதா இல்லை சவப்பெட்டிகளில் வருவதா என கலங்கி நிற்கும் தருணம் இது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (20.10.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் என்று கூறும் போது, எமக்கு ஞாபகம் வருவது இறந்த உடல்களுக்கு மத்தியில் இரத்த ஆறு ஓடும் காசா, மழலை பேசும் குழந்தைகள், வயிற்றுப் பசிக்கு உணவுக்கு பதிலாக குண்டுகளின் தோட்டாக்களை விழுங்கும் மக்கள் என, காசாவின் இந்த சோகம் 4000 ஆண்டுகள் பழைமையானது.
கஷ்டத்திற்கான காரணத்தினை அறிய வேண்டும்
எந்தவொரு பிரச்சினைக்கும் காரணத்தினை கண்டுபிடிக்காது எமக்கு தீர்வினை தேட முடியாது. துக்கத்தில், கஷ்டத்தில் இருந்து நாம் மீள் எழ வேண்டுமெனின் அந்த கஷ்டத்திற்கான காரணத்தினை கண்டறிய வேண்டும். ஆதலால் இந்த பிரச்சினையின் வரலாற்றினை சுருக்கமாக கூறுகிறேன்.
யூதர்களில் ஆதாரத்தின்படி, சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பலஸ்தீன் பூமியில் தான் இஸ்ரேல் உருவாகியுள்ளது. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அசிரிய ஏகாதிபத்தியவாதிகளால் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. பின்னர் இஸ்ரேல் யூதர்கள் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகிறார்கள்.
அதற்குப் பின்னர் பெபிலியானா ஏகாதிபத்தியவாதிகளால் தெற்கு இஸ்ரேலை ஆக்கிரமிக்கிறார்கள். இந்த யூதர்கள் ஐரோப்ப நாடுகளுக்கு பிரிந்து செல்கிறார்கள். யூதர்கள் வியாபரத்திலும் சரி, கல்வியிலும் சரி, போராடவும் சரி மிகவும் திறமையானவர்கள். அல்பர் ஐஸ்டைனில் இருந்து மார்க் சர்க்கபர் ஆகியோர் இதனை நிரூபித்தும் உள்ளனர்.
இவ்வாறு அங்கங்கே சென்ற யூதர்கள் வியாபாரத்திலும் பொருளாதாரத்திலும், விஞ்ஞானத் துறையிலும், பொறியியல்துறையிலும், மருத்துவத் துறையிலும் சரி யாவரினதும் கவனத்தினையும் பொறாமையையும் பெற்றுக் கொண்டவர்கள் என்ற வகையில் மிளிரத் தொடங்கினர். 19ம் நூற்றாண்டிற்கு பின்னர் மீண்டும் இஸ்ரேல் தலைதூக்குகிறது.
முதலாம் உலக யுத்தத்தின் பின்னரான நிலமை
முதலாம் உலக யுத்தத்திற்கு பின்னர் பலஸ்தீன் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு சொந்தமாகிறது. கொடுத்த வாக்கினை நிறைவேற்றி 1920 இல் இருந்து பிரித்தானியா முன்னின்று ஐரோப்பாவில் உள்ள யூதர்களை ஒன்று திரட்டி பலஸ்தீனில் குடியேற்ற ஆரம்பித்தனர். தங்களது பூமியில் வேறு யாரும் வந்து குடியேறுவதை அரேபியர்கள் விரும்ப மாட்டார்கள்.
அப்போது தான் இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. இறுதியில் பலஸ்தீன் இரண்டாக பிரிக்கப்பட்டு இஸ்ரேல் - பலஸ்தீன் என முஸ்லிம்கள் - யூதர்கள் என இரண்டு நாட்டினை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்படுகின்றது. இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
இரண்டாம் யுத்தத்தில் ஹிட்லரினால் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டு சிறை பிடிக்கப் படுகின்றனர். இதனால் உலகின் அனுதாபம் யூதர்கள் பக்கம் திரும்பியது. யூதர்கள் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கப்பல்களில் அமெரிக்காவுக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது அமெரிக்கா இது நமக்கு தலையிடி என்று கூறி கப்பல்களை திருப்பி அனுப்பினர்.
மீண்டும் யூதர்கள் பலஸ்தீனுக்கே வந்தனர். அப்போது யூதர்கள் அராபியர்கள் என பலஸ்தீன் பூமி இருந்தது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இறுதியில் இங்கிலாந்தில் ஐநாவுக்கு அறிவிக்கின்றனர், எம்மால் இங்கு இருக்க முடியவில்லை. நாம் வெளியேறுகிறோம் என்று..
அப்போது அமெரிக்கா - பிரான்ஸ் இதற்கு தலைமை தாங்கி, அமெரிக்கா தனது பணத்தின் அதிகாரத்தினை பயன்படுத்தி சில நாடுகளுக்கு கடன் வழங்கியும் பலஸ்தீன் வழங்கிய வாக்குறுதியை பிரான்ஸ் காரணம் காட்டி வாக்கெடுப்பு நடத்தி 1947ம் ஆண்டு பலஸ்தீனை இரண்டாகப் பிரித்து 56 வீதத்தினை இஸ்ரேலுக்கும் 44 வீதம் பலஸ்தீனுக்கும் வழங்கும் வகையில் யோசனை முடிக்கப்படுகின்றது. இதற்கு அரபு நாடுகள் இணங்கவில்லை.
காணாமல்போன பலஸ்தீன்
1948 இல் உருவான இஸ்ரேலுடன் அதனை சூழ இருந்த அரபு நாடுகள் யுத்தம் செய்ய ஆரம்பித்தன. 1948 இல் இருந்து 1973 வரைக்கும் தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்த பெறுபேறுகளின் முடிவில் உலக வரைபடத்தில் புள்ளியாக காணப்பட்ட இஸ்ரேல் முழு பலஸ்தீனையும் விழுங்கி பாரிய நாடாக உருவெடுக்கிறது. இதனால் பலஸ்தீன் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகின்றது.
பலஸ்தீன் மக்கள் அரபு நாடுகளுக்கு சென்றனர். காசா பகுதியில் தங்கினர். அதற்குப்பின் பலஸ்தீன் யாசிர் அரபாத் தலைமையில் தனது சொந்த பூமிக்காக போராட ஆரம்பித்தது. இது மிகவும் சுருக்கமானது. பலஸ்தீன் தனது நாட்டின் ஒரு பகுதியினை இஸ்ரேலுக்கு வழங்க தீர்மானிக்கிறது, ஹமாஸ் அதனை மறுக்கிறது.
இறுதியில் 2006இல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று காசா ஹமாஸ் தலைமையில் கீழ் வருகிறது. அன்றிலிருந்து இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உக்கிரமடைகிறது. கடந்த அக்டோபர் 6ம் திகதி வெடித்ததும் மற்றுமொரு மோதலே.. சர்வதேசம் என்ன செய்கிறது? இறந்த உடல்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. காணமல் போனோரை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
காயமடைந்தோரை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இரங்கல் தெரிவிக்கின்றனர். ஆதரவு தெரிவிக்கின்றனர். ஐநாவுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் ஐநாவின் அதிகாரம் செலுத்தும் அமெரிக்கா – இங்கிலாந்து ஒன்று சேர்ந்து தான் இஸ்ரேலை உருவாக்க தலைமை தாங்கியது.
ஐரோப்பாவில் இருந்த யூதர்களையும் அமெரிக்காவில் சவாலாக இருக்கும் யூதர்களையும் அரபு நாட்டிற்கு திருப்பினர். இந்த பிரச்சினைக்கு ஆரம்ப கர்த்தாவாக அமெரிக்கா – ஜேர்மன் – பிரான்ஸ் – ஐக்கிய இராச்சியம் இந்த நான்கு நாடுகளும் ஐநாவின் தலைமையாக இருக்கும் வரைக்கும் ஐநாவுக்கு இந்தப் பிரச்சினையை தீர்க்க முன்னிலையாகும் அதிகாரம் இல்லை.
நாம் ஐநாவுக்கு சொன்னாலும் அது சாத்தியம் இல்லை. இதற்கு சரியான தீர்வு பிரிக்ஸ் அமைப்பு தான். இந்தியா – சீனா – ரஷ்யா – பிரேசில் – தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பு வேண்டும். அப்படியிருக்க எமது நாட்டில் உள்ள அரசியல் பண்டிதர்கள் இந்த பிரச்சினைக்கு யோசனைகளை முன்வைத்து வருகிறார்கள்.
சரியாக ஐநா செயாளர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள். அதனை விட்டு இதனால் இலங்கைக்கு என்ன பாதிப்பு என தேடுங்கள். மத்திய கிழக்கு நாடுகளில் இந்த போர் சூழலில் ஒரு இலட்சத்திற்கும் மேல் இலங்கையர்கள் பணி புரிகிறார்கள். அவர்கள் நாட்டுக்கு வேலையை விட்டு வருவதா இல்லை சாவுப் பெட்டிகளில் வருவதா என கலங்கி நிற்கும் தருணம் இது. இது குறித்து யோசியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |