காசாவில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு
காசாவில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும் இஸ்ரேல் அதனை தொடர்ந்து மீறி வருவதாகவும், முற்றுகையிடப்பட்ட அந்தப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாலஸ்தீன அரசியல் கைதிகள் தொடர்பாக கண்காணிக்கும் மனித உரிமை அமைப்பான அடாமீர் (Addameer) அமைப்பின் பணிப்பாளர் அலா ஸ்காஃபி இதனைத் தெரிவித்துள்ளார்.
காசாவிற்குள் நுழையும் சரக்கு வாகனங்களில் சுமார் 80 சதவீதம் வணிகத் துறைக்கு திருப்பப்படுவதாக உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அந்த வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட்கள் பொதுமக்கள் வாங்க இயலாத உயர்ந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால், பெரும்பாலான மக்கள் அவற்றை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக மருந்துகள், கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான மனிதாபிமான உதவிப் பொருட்கள் தேவையான அளவில் காசாவிற்குள் நுழையவோ, அவை அவசரத் தேவையில் உள்ள மக்களிடம் சென்று சேரவோ முடியாமல் இருப்பதாக ஸ்காஃபி சுட்டிக்காட்டினார்.
மேலும், மத்திய காசாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை, எரிபொருள் பற்றாக்குறையால் அடுத்த சில மணி நேரங்களுக்குள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என அவர் எச்சரித்தார்.
இதை அவர் “வரவிருக்கும் ஒரு பெரும் சுகாதார பேரழிவு” என வர்ணித்ததுடன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் உயிர்காக்கும் சேவைகள் முழுமையாக செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் அழிவுப் போரின் போது, காசாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பெரும்பாலானவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இதுவரை 125 சுகாதார நிலையங்கள் சேதமடைந்துள்ளதுடன், அதில் 34 மருத்துவமனைகள் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.