இஸ்ரேலின் அடுத்தடுத்த நகர்வுகள்! ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கண்டனம்
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியின் நிர்வாக மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள எடுத்துள்ள முடிவுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த தற்போதைய நகர்வுகள், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் 'இரு நாடு' தீர்வுக்கான வாய்ப்புகளைத் திட்டமிட்டுக் குலைப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களில் அங்கீகாரம் அற்றவை
கிழக்கு எருசலேம் உள்ளிட்ட மேற்குக்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து யூதக் குடியேற்றங்களும், அவற்றுக்கான உள்கட்டமைப்புகளும் சர்வதேச சட்டங்களின்படி எவ்வித சட்டபூர்வ அங்கீகாரமும் அற்றவை என்றும், அவை ஐநா தீர்மானங்களை வெளிப்படையாக மீறுவதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதுடன், சர்வதேச நீதிமன்றத்தால் (ICJ) சட்டவிரோதமானது எனச் சுட்டிக்காட்டப்பட்ட ஆக்கிரமிப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியை நிலைநாட்ட ஒரே வழியாகக் கருதப்படும் பேச்சுவார்த்தை மூலமான ‘இரு நாடு’ தீர்வை அனைத்துத் தரப்பினரும் பாதுகாக்க வேண்டும் என்றும், இஸ்ரேல் தனது இந்த முடிவுகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு பேரவையின் தீர்மானங்களுக்கு இணங்க நடப்பதே நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.