ஹமாஸ் அனுப்பிய பிணைக்கைதிகளின் உடல்கள் தொடர்பில் சந்தேகம்
இஸ்ரேலுக்கு காசா அனுப்பி வைத்துள்ள உடல்கள் தொடர்பில் இஸ்ரேல் புலனாய்வுத்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தற்போது வரை போர் தொடர்கின்றது.
பிணைக்கைதிகளின் உடல்கள்
அப்போது, பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றதுடன் உயிரிழந்தவர்களின் உடல்களையும் எடுத்துச் சென்றனர்.

இஸ்ரேலில் 1200 பேர் உயிரிழந்த நிலையில், காசாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹமாஸ் உயிரோடு உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், பிணைக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும்.
அதற்கு இணையாக இஸ்ரேல் சிறையில் பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
உயிரிழந்த பலஸ்தீனர்களை ஒப்படைக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை 30 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் காசாவுக்கு அனுப்பி வைத்தது.
விடுதலை ஒப்பந்தம்
அத்துடன் பிணைக்கைதிகள் விடுவிப்பு- பாலஸ்தீன கைதிகள் விடுதலை ஒப்பந்தம் நிறைவுக்கு வந்தது.

ஆனால் ஹமாஸ் இன்னும் அனைத்து உடல்களையும் ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது. இதனால் மேற்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவது குறித்து பதற்றமான நிலைதான் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு மூன்று உடல்களை இஸ்ரேலுக்கு காசா அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் உடல்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த உடல்கள் 2023, ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டபோது இறந்தவர்களின் உடல்கள் அல்ல என இஸ்ரேல் புலனாய்வுத்துறை கூறியதாக, இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெயர் தெரிவிக்க விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
225 உடல்கள்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகமும், மூன்று உடல்களும் எந்தவொரு பிணைக்கைதிகள் உடையது அல்ல.ஆனால், விரிவான அறிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை.
அதேவேளையில் ஹமாஸ் ஆயுதப்படை பிரிவு "நாங்கள் உடல்களின் மாதிரிகளை ஒப்படைக்க முன்வந்ததாகவும், ஆனால் இஸ்ரேல் அதை மறுத்துவிட்டு, பரிசோதனைக்காக உடல்களை கேட்டதாகவும். இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை நிறுத்துவதற்கான உடல்களை ஒப்படைத்தோம்" என தெரிவித்துள்ளது.

அந்த உடல்கள் யாருடைய உடல்கள் எனத் தெரியவில்லை. ஒப்பந்தத்தின்படி 11 உடல்களை இஸ்ரேல் பெற்றுள்ளது.
ஆனால் 17 உடல்களை ஒப்படைப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. ஒருசில நாட்கள் இடைவெளி விட்டுவிட்டு ஒன்று அல்லது இரண்டு உடல்களை என ஹமாஸ் உடல்களை ஒப்படைத்து வருகிறது.
இஸ்ரேல் 225 உடல்களை ஒப்படைத்துள்ளது. இதில் 75 உடல்கள் மட்டுமே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.