மக்கள் போராட்டத்தால் இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு நெருக்கடி
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பதவி விலகவும் அந்நாட்டு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளன.
இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.
இதில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை.
இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தீவிர போராட்டம்
அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம் இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பிடம் போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஒன்றை செய்து அங்குள்ள பணயகைதிகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட அந்நாட்டு மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரமாண்ட பேரணி நடத்தியது மட்டுமல்லாது நெதன்யாகுவை பதவி விலக கூறியும் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |