காசா போர் நிறுத்தம் தொடர்பில் ஜோ பைடன் புதிய தகவல்
காஸாவில் நடைபெற்றுவரும் ஹமாஸ் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு நேற்று (26.2.2024) திங்கட்கிழமை வழங்கிய நேர்காணலில் பைடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரம்லான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்பர கைதிகள் விடுவிப்பு
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது.
ஆனால் ஹமாஸ் அமைப்பினரும், இஸ்ரேலும் சளைக்காமல் போர் புரிந்து வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் சுமுக முடிவு எட்டப்பட்டால் பரஸ்பர கைதிகள் விடுவிப்பு மற்றும் ஆறு வார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஆகியவை நிறைவேறும்.
இந்நிலையில், காசாவில் மார்ச் 4-ம் திகதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், “காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் நெருக்கமாக இருக்கிறோம் என்று எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் தெரிவித்தார். அடுத்த திங்கட்கிழமைக்குள் (மார்ச் 4-ம் திகதி) போர் நிறுத்தம் ஏற்படும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |