லெபனானில் முக்கிய கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்: நடந்த சரமாரி தாக்குதல்கள்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள இஸ்ரேல், தெற்கு லெபனானில் அமைந்துள்ள முக்கிய மூலோபாயப் பகுதியான Beaufort Castle கோட்டையை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த கோட்டையை கைப்பற்றியுள்ளமை, ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கையில் தீர்மானகரமான மாற்றம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
லிடானி (Litani) ஆற்றை அடிப்படையாகக் கொண்டிருந்த முன்னைய எல்லைக் கோட்டைக் கடந்தும், இஸ்ரேல் தரைப்படைகள் தற்போது லெபனான் பகுதிக்குள் மேலும் ஆழமாக முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, தெற்கு லெபனானில் உள்ள மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளின் எல்லையையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
போலி அழைப்புகளைப் பயன்படுத்தும் பாதாள உலகக் கும்பல்கள்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் வெளிசத்திற்கு வந்த உண்மை
முக்கிய கோட்டை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லெபனான் பிரதமர், பொதுமக்களை பாதிக்கும் வகையில் இஸ்ரேல் கூட்டு தண்டனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

லிடானி பள்ளத்தாக்கை மேலிருந்து கண்காணிக்கக்கூடிய உயரமான பகுதியில் அமைந்துள்ள Beaufort Castle, சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு சிலுவைப் போராளிகளால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதில் இந்தக் கோட்டை முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது.
முன்னதாக, 44 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற முதல் லெபனான் போரின்போதும் இந்தக் கோட்டையை இஸ்ரேல் படைகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோட்டை கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் நெதன்யாகு, "நாம் அச்சத்தின் தடையை உடைத்துவிட்டோம். சிரியா, காசா மற்றும் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் முன்முயற்சியுடன் செயற்பட்டு வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும், ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இஸ்ரேலின் பிடியை மேலும் ஆழப்படுத்தி விரிவுபடுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.