நாடளாவிய ரீதியில் சுதந்திர தின நிகழ்வுகள்
திருகோணமலை
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையில் சுதந்திர தின நிகழ்வுகள் விமர்சையாக கொண்டாப்பட்டன.
திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்தகுமார டேப் தலைமையில் சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இதன் போது தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு அணிவகுப்பு நிகழ்வும்நடைபெற்றது.
சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரியினால் தெளிவுபடுத்தப்பட்டது. இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
மட்டக்களப்பு
இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14பிரதேச செயலகங்களிலும் இன்று காலை சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று காலை இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி ல.பிரசந்தன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன் உட்பட உத்தியோகத்தர்கள்,திணைக்கள தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீர்த்த இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்காக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு உதவி பிரதேச செயலாளரினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை குறிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் சிரமதான பணிகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம்
இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் காலை 8.19 மணியளவில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
"சவால்களை முறியடிக்கும் நாளை" எனும் தொனிப்பொருளில் மாவட்ட அரசாங்க அதிபரின் சுதந்திர தின உரை இடம்பெற்றதுடன், உத்தியோகத்தர்களுக்கு மர கன்றுகளும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட செயலக வளாதத்தினுள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், மதகுருமார்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





