குருநகர் இறங்குதுறையில் அழுது புலம்பிய இஷாரா செவ்வந்தி
யாழ்ப்பாணம் - குருநகர் இறங்குதுறையில் இருந்து சிறிய மீன்பிடி படகில் சென்றபோது இஷாரா செவ்வந்தி பயத்தில் அழுது புலம்பியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் தங்கியிருந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றார். அந்த வகையில் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அம்பாள்குளம் பகுதியில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் செவ்வந்தி
இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனியவில் இருந்து தமிழர் பகுதிக்கு சென்ற செவ்வந்தி யாழ்ப்பாணத்தில் இரு நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சமயத்தில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மேயின் வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச ஆட்கடத்தலில் ஈடுபடும் கும்பலின் உதவியை நாடியுள்ளார்.
அவர்களே செவ்வந்தியை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் மட்டுமே செவ்வந்தி நாட்டைவிட்டு வெளியேறியமை தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
குருநகர் இறங்கு துறை
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த செவ்வந்தியை குருநகர் இறங்குதுறைக்கு அழைத்து சென்று அங்கிருந்த சிறிய மீன்பிடி படகில் ஏற்றியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பயத்தில் அழுது புலம்பிய செவ்வந்தி படகில் பயணிக்கும் போது அழுதுகொண்டே சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு மூவர் குருநகர் இறங்கு துறையில் இருந்து படகில் மே மாதம் 6 ஆம் திகதி செவ்வந்தியை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மூவரும் திரும்பி அதே படகில் யாழ்ப்பாணம் வந்ததாகவும் விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




