சிறுமி ஹிஷாலினி உயிரிழப்பு சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஜூட் குமார் ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான மரண விசாரணை சாட்சிப்பதிவுகள் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹிஷாலினி உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மரண விசாரணை சாட்சிப் பதிவுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இதன்போது 4 ஆம் இலக்க சாட்சியாளரின் சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போனமையினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வழக்கின் மரண விசாரணை சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 2023 ஜனவரி 10 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மொழி பெயர்ப்பாளரின் உதவியைப் பெற முடியாமல் வழக்கு ஒத்திவைக்கப்படுகின்றமை 2 ஆவது சந்தர்ப்பம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஷாலினி மரணம்
கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
டயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வீட்டின் வறுமை காரணமாக முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணி புரிந்து வந்த நிலையில் உடலில் தீ பரவி தீக்காயங்களுடன் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,சிறுமி ஹிஷாலினியின் மரணத்தின் பின்னர் சமூக மட்டத்தில் இந்த சம்பவத்திற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் பல தகவல்கள் வெளியாகியிருந்தது.
இருப்பினும் சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கேள்வி பலர் மத்தியிலும் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.