மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று(03.04.2025) நடாத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்,
“13ஆவது திருத்த சட்டம் இலங்கையின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு 35 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று, 2009ஆம் ஆண்டு முடிவுற்றது.
கலாசார உரிமைகள்
போரின் போதும் போர் முடிவடையும் காலக் கட்டத்திலும் பொது மக்கள் மீது பாரதூரமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தாததுடன் இராணுவமயமாக்கலையும், சிங்கள காலணித்துவத்தையும், பௌத்தமயமாக்கலையும் விரிவாக்கினர்.
அத்துடன், தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமை மற்றும் கலாசார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களும் அந்துமீறல்களும் தொடர்கின்றன.
இந்தப் பிரதேசங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார உரிமைகள் அரச கொள்கைகளாலும் நடைமுறைகளாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
அதிகாரப் பகிர்வு
எமது கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபவங்களின் அடிப்படையில், 13ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரப் பகிர்வு நிலைபேறானதல்ல. எந்த நேரத்திலும் இலங்கை அரசானது மாகாண அதிகாரத்தை மீளப்பெற முடியும்.
எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்கள், சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையே எமக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை உறுதிப்படுத்தக் கூடிய நிலைபேறான ஒரே முறைமை என்று திடமாக நம்புகிறோம்.
அந்தவகையில், இந்தியப் பிரதமருக்கு நல்வரவு கூறுவதுடன் இலங்கைக்கான தங்களின் உத்தியோகபூர்வ வருகையை நாம் உலர்வாக கௌரவிக்கின்றோம்.
இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த தங்களின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு இந்த பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
