கிளிநொச்சி - கிருஷ்ணபுரம் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் முறைகேடுகள்
கிளிநொச்சி - கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று, அவை தற்போது வட மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலை அமைக்கும் காலத்திலிருந்து இன்று வரை கட்டுமானப் பணிகள் பொருட் கொள்வனவு, உணவு வழங்கல் உள்ளிட்ட பல விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.
மேற்படி முறைகேடுகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த முறைகேடுகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதனையடுத்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை வடக்கு மாகாண கணக்காய்வு திணைக்களம் ஆரம்பக்கட்ட கணக்காய்வினை மேற்கொண்டு அறிக்கையினையும் வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், உள்ளிட்ட உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
தொற்று நோய் வைத்தியசாலைக்கான நாளாந்த நுகர்வுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவ்வைத்தியசாலையில் பேணப்படும் பொருள் பெறுவனவு ஏட்டின் பிரகாரம் வைத்தியசாலையால் பெறப்பட்ட பொருட்களின் எண்ணிக்கைக்கும் கொள்வனவுச் சிட்டையில் காட்டப்பட்ட எண்ணிக்கைக்கும் இடையில் அதிகளவான வேறுபாடுகள் காணப்படுகின்றமை, பொருள் கொள்வனவுச் சிட்டையில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களின் அளவுகள் ( கிராம்,கிலோ கிராம்) என்பன காணப்படாமையால் சிட்டையில் விலை குறிப்பிடப்பட்ட பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதா என்பதனை உறுதி செய்ய முடியாத நிலை, வடக்கு மாகாண வழங்குநர்கள் பதிவேட்டில் 2020 பதியப்படாத நிறுவனங்களிடம் பொருட்கொள்வனவில் ஈடுபட்டமை,
இவ்வாறு பதிவுசெய்யப்படாத ஒரு நிறுவனத்திலிருந்து மட்டுமே 2.6 கோடி ரூபாவிற்கு அதிகமான பொருட்களை 11 தடவைகளில் கொள்வனவு செய்தமை, வாங்கப்பட்ட பொருளின் மேல் குறிக்கப்பட்ட விலைக்கும் பொருட்கொள்வனவுச் சிட்டையில் அப்பொருளுக்கு இடப்பட்டுள்ள விலைக்கும் இடையிலான வேறுபாடுகள் மற்றும் இவ்வகையில் பல லட்சக்கணக்கில் மேலதிக பணம் செலுத்தப்பட்டுள்ளமை, மேலும் பொருள் கொள்வனவு ஒன்றுக்காகக் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையால் கேள்வி ஆவணங்கள் வழங்கப்பட்ட 5 நிறுவனங்களில் 3 நிறுவனங்களிடமிருந்து மட்டும் விலை மனுக்கள் பெறப்பட்டுள்ளமை என்பனவாகும்.
இவை மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்களின் நிறுவனமாகும்.
எனவே இதன் மூலமும் வெளிப்படைத்தன்மை, போட்டித்தன்மை ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை போன்ற பல முறைகேடுகள் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தவிர சமைத்த உணவு வழங்கும் விடயத்திலும் பல்வேறு முறைகேடுகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றமையை கணக்காய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பிராந்திய சுகாதார பணிமனையால் கேள்வி கோரப்படக்கூடிய தொகை விட 40 மடங்கு அதிகமான தொகைக்கு மேலதிகாரிகளது எவ்வித முன் அனுமதியும் இன்றி கேள்விகள் கோரப்பட்டு விநியோகஸ்தர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை, தெரிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து நிறைவேற்றுப் பிணைப் பொறுப்பு பெற்றுக்கொள்ளாமை ஆகியன அவற்றில் சிலவாகும்.
கிருஸ்ணபுரம் தொற்றுநோய் வைத்தியசாலையில் அனைத்து மேற்பார்வை மற்றும் செலவினங்களையும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையே மேற்கொண்டு வருகிறது.
எனவே கணக்காய்வு அவதானங்களின்படி கோவிடின் பெயரால் அரச பெறுகை நடைமுறைகள் மற்றும் வடமாகாண நிதி விதிகளை மீறியும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கோடிக்கணக்கான அரச பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட தரவுகளின்படி, கிளிநொச்சியில் தொற்றுநோய் வைத்தியசாலை தவிர்த்து புதிதாக நான்கு கோவிட் சிகிச்சை நிலையங்கள் இதே பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் தற்போது பராமரிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
எனவே இங்கும் இதே நிலைமை ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக பொது மக்கள் கருதுகின்றனர்.
எனவே இது தொடர்பில் உரிய உயர் மட்ட அதிகாரிகள் கணக்காய்வு அறிக்கையினை
அடிப்படையாகக் கொண்டும், மேலும்
திணைக்கள மட்டத்திலான ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களால் கோரிக்கை
விடப்பட்டுள்ளது.


