கிளிநொச்சியில் பயிர்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி இடம்பெற்ற முறைகேடுகள்! வெளியான தகவல்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான 2023ற்கான சிறுபோக செய்கையில் பயிர்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி பல்வேறுபட்ட முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக மாவட்ட செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக செய்கையில் கமக்கார அமைப்புகள் மாவட்ட பயிர்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி மேலதிக விதைப்புக்களையும் பங்கு மோசடிகளையும் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சிலரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக செய்கை விஸ்த்தீரனத்தை ஆய்வுக்குட்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரதி நீர்பாசன பணிப்பாளர் பிரதி ஆணையாளர் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதி அடங்கிய குழு நியமிக்கப்பட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அது தொடர்பான அறிக்கை நேற்று (20-07-2023)மாலை வெளியிடப்பட்டுள்ளது.
தண்ணீர் பங்குகள்
இந்த அறிக்கையின்படி, இரணைமடு குளத்தின் கீழ் 1992 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நீர்வரி இடாப்பின் படி 5809 தண்ணீர்ப் பங்குகள் காணப்படுகின்றன.
இதில் குறிப்பிட்ட சில நீர்வரி இலக்கங்களுக்குரிய பங்குகள் பகுதி பகுதிகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பயிர்செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இது தொடர்பான எந்த ஆவணங்களும் கமக்கார அமைப்புக்களால் கமநலசேவை நிலையங்களுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
அதேவேளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள மேலதிக விதைப்புகள் தொடர்பிலும் கமநல சேவை நிலையங்களுக்கு கமக்கார அமைப்புக்களால் அறிக்கையிடப்படவில்லை.
அதேபோன்று பங்கு மாற்றங்கள் எவையும் கமநல சேவை நிலையங்கள் ஊடாக மேற்காள்ளப்படவில்லை. அதிகளவான பங்குகள் வெவ்வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அதேவேளை காணிகள் அற்ற விதத்தில் காணப்படுகின்ற நீர்வரி பங்குகள் காணிகள் இல்லாத நீர்வரி பங்குகள் குறித்த செய்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு 198 வரையான காணிகள் அற்ற பங்குகளாக இதுவரை இனங்காணப்பட்டுள்ள போதும் அவை பயிர்செய்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.
புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பு காணியற்ற ஒன்பதரை ஏக்கர் பங்குகளையும் முறையற்ற விதத்தில் விற்பனை செய்துள்ளன என்றும் குறித்த ஆய்வறிக்கையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |