சூட்சகமான முறையில் திருடப்படும் யாழ். மக்களின் சேமிப்பு - இரேனியஸ் செல்வின் குற்றச்சாட்டு
யாழ். மாவட்ட மக்கள் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த சேமிப்புக்கள் எல்லாம் மிகச் சூட்சகமான முறையில் கொள்ளையிடுவதாகவும், இந்த பாரிய பொறிக்குள் எமது பெண்களே அதிகம் சிக்கிக் கொள்கிறார்கள் என்று சமூக ஆர்வலர் இரேனியஸ் செல்வின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற "நெகிழ்ச்சிமிக்க பெண்கள் தேசத்தின் பெருமை" நிகழ்வொன்றில் பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வங்கிகளின் அட்டூழியங்கள்
அவர் மேலும் கூறுகையில்,
பெண்களின் இறைமை என்பது வேறு. பெண்களின் பொருளாதார இறைமை என்பது வேறு. இந்த இரண்டிலும் சிக்குண்டு முன்னேறிச் செல்ல முடியாது எமது பெண்கள் தள்ளாடிக் கொண்டிருக்க்கின்றனர்.
இதேநேரம் இலங்கையில் உள்ள வங்கிக் கட்டமைபுகளூடாக பெறும் நிதி வசூலிப்பில் யாழ். மாவட்டம் முதல் நிலையில் இருக்கின்ற போதும் வங்கிக் கடன் வழங்கலில் யாழ்ப்பாணம் 25 ஆவது நிலையில் இருக்கின்றது.

இது எமது நிதியை எம்மிடமிருந்து வங்கிகள் சுரண்டி தென்னிலங்கை மாவட்டங்களிலுள்ளவர்களுக்கு தாரைவார்க்கும் செயலாக நாளாந்தம் நடந்தேறுகின்றது.
பொருளாதார நடவடிக்கை
அதேநேரம் வங்கிகள் எமது மாவட்ட மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாதிருப்பது வேதனைக்குரியது. மேலும், பச்சைப் பொருளாதாரம் நீலப் பொருளாதாரம் என்று அழைக்கிறார்கள். ஆனால் அந்த பொருளாதாரங்களால் மக்களுக்கு நன்மைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
பெண்கள் தமக்கான முன்னேற்றத்துக்கு நிறுவனங்களை உருவாக்க வேண்டுமே தவிர சுரண்டும் நிறுவனங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இவை எமது சேமிப்புக்களை கொள்ளையிடுகின்றன.
குறிப்பாக, இந்த நிதுவனங்களுக்கு மிக உறுதியான நம்பிக்கை இருக்கின்றது தங்கத்தை கொண்டுவந்து அடகு வைத்துவிட்டு மீள எடுக்க மாட்டீர்கள் என்று. அதனால் அந்த தங்கம் எல்லாம் தங்களுக்கு சொந்தம் ஆகிவிடும் என்று தான் மின்கம்பங்கள் தோறும் விளம்பரங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர். அன்று எமது பிரதேசங்களில் மக்கள் வங்கியும், கிராமிய வங்கியும் ஒரு சில தனியார் வங்கியும் செய்த அடகு மற்றும் இலகு கடன் சேவையை இன்று பல தனியார் நிறுவனங்கள் செய்கின்றன.
தற்போது யாழ்ப்பாணத்தில் பல தனியார் நிறுவனங்கள் இதனை அடிப்படையாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதன் நோக்கம் மக்களின் சேமிப்பை கொள்ளையிடுவதே. இந்த சுரண்டலுக்கு பலியாகிக் கொண்டிருப்பவர்கள் எம் வீட்டுப் பெண்கள் தான். இதேவேளை, முதன்மை பொருளாதாரம் எனக் கூறும் விவசாயம், கால்நடை, உள்ளிட்ட நாளாந்த தொழிலை செய்யும் பெண்கள் தான் இதில் சிக்க வைக்கிறார்கள்.
இந்த நிலைமையில் தான் நாம் நீலப் பொருளாதாரம், பசுமை பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றோம். நாங்கள் புரியத் தவறியுள்ள விடயம் என்னவென்றால் நீலப் மற்றும் பசுமைப் பொருளாதாரம் என்பது என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது, வளங்களை நாம் எவ்வாறு அறுவடை செய்ய வேண்டும் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்றார்.
தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம் - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி