வளைகுடா முழுவதும் பரவியுள்ள போர் பதற்றம்! ட்ரம்பின் 48 மணி நேர காலக்கெடுவிற்கு ஈரானின் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த 48 மணி நேரக்கெடுவிற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா தனது நாட்டின் எரிபொருள் அல்லது எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ஏதேனும் தாக்குதலைத் தொடுத்தால், வளைகுடாப் பகுதி முழுவதும் பரவியுள்ள, அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் தாக்குவோம் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எரிசக்தி நெருக்கடி
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமையும் எரிசக்தி நெருக்கடியும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றுகையிட்டிருப்பது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக உயரக் காரணமாகியுள்ளது.
போர் நிறுத்தும்
இந்நிலையில்,போரை நிறுத்தும் தந்திரமாக மத்திய கிழக்கை தாண்டியும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் போவதை ஈரான் சூசகமாக தெரிவித்துள்ளது.
ஈரான் எதிரிகளை பற்றி எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பூங்காக்கள், பொழுதுபோக்கு பகுதிகள், சுற்றுலா தலங்கள் என உலகத்தில் எந்த இடமும் இப்போது இருந்து அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளது.