நடுக்கடலில் இலங்கையர்களுடன் வெளிநாட்டு கப்பலை திடீரென கைப்பற்றிய ஈரான்
இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட வெளிநாட்டு எரிபொருள் கப்பலை ஈரானிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
6 மில்லியன் லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து அதிகாரிகள் கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வழியாக எரிபொருள் கடத்தல்
இலங்கையர்களை தவிர, கைது செய்யப்பட்ட பணியாளர்களில் இந்தியர்கள் மற்றும் பங்களாதேஷ் நாட்வர்களும் அடங்குவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிறுத்துவதற்கான உத்தரவுகளை மீறியமை, தப்பிச் செல்ல முயற்சித்தமை மற்றும் கப்பலின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் போன்ற காரணங்களின் அடிப்படையில் நேற்று (12) மாலை குறித்த கப்பல் தமது பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிக குறைந்த எரிபொருள் விலைகளைக் கொண்ட ஈரானில் இருந்து கடல் வழியாக அண்டை நாடுகளுக்கு எரிபொருள் கடத்தல் பொதுவானது என்றும் வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.