கனமழையால் பாதிப்படைந்துள்ள விவசாய நிலங்கள்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன்படி, நீர்மட்டம், 36 அடி 10.5 அங்குல அளவுகளை தாண்டி உள்ளதுடன், குளத்தில் இருந்து 10.5 அங்குலத்திற்கு நீர் வான் பாயந்து கொண்டிருப்பதால் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியிடப்பட்டுள்ளது.
குளத்தின் கீழ்பகுதி
இதன் காரணமாக குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையால் கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிறமந்தனாரு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும்,வயல் நிலங்களும் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு - போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, மண்டூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்டு செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மை செய்கையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மண்டூர், வெல்லாவெளி, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை, போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக நவகரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வேளாண்மை 70 நாட்கள் பயிராக காணப்படுவதனால், குடலைப்பருவத்தில் இருந்து கதிர்பருவத்திற்கு மாறும் இவ்வேளையில் அதிகரித்த மழை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
செய்தி - ருசாத்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற பலத்த மழை வீழ்ச்சியினால் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது.
இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டள்ளது.
குறித்த வீதியூடாக இவ்வாறு வெள்ள நீர் ஊடறுத்துச் செல்வதனால் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், அரச ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் அச்சத்துடனேயே பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது 03 ஆம் தவணை பரீட்சை பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்று வருவதானால் மண்டூர் வெல்லாவெளி வீதியைப் பயன்படுத்தி பாடசாலைக்குச் செல்லும், வேத்துச்சேனை, மண்டூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று வருவதிலும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - உடையார் கட்டு கமநல சேவை பிரிவுக்குற்பட்ட நெத்தலியாறு பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வயல் நிலங்கள் முற்றுமுழுதாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அறுவடை செய்வதற்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நோய் தாக்கம் காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெற் கதிர்கள் முற்றுமுழுதாக நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |