ஈரானுக்கு எதிரான போரில் கட்டுப்பாட்டை இழந்த ட்ரம்ப்! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான போரில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், தற்போது அவர் கடும் பீதியில் இருப்பதாகவும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் வெளியுறவு உறவுகள் குழுவின் முக்கிய உறுப்பினரான மர்பி, ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் கூட்டு இராணுவ நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வரும் சட்டமியற்றுபவர்களில் ஒருவராவார்.
பெரும் பின்னடைவு
இந்த இராணுவ நடவடிக்கை தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இது "ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான போர்" என்று அவர் வர்ணித்துள்ளார்.
ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை அந்நாட்டு அரசு மீண்டும் திறக்காவிட்டால், அங்குள்ள மின் உற்பத்தி நிலையங்களை "அழிப்போம்" என்று ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் போரினால் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இது ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரத்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் செனட்டர் மர்பி சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்டமிட்ட இலக்குகளை அடைய முடியாமல் போர் நீடித்துக் கொண்டே செல்வது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.