ஈரான் போர்: 3,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
கடந்த பெப்ரவரி 28 முதல் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரான் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் போரில், ஈரானில் இதுவரை 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தடயவியல் மருத்துவ அமைப்பின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெடி ஆரணி தெரிவித்துள்ளார்.
இதில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சுமார் 40 சதவீத உடல்கள் இன்னும் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பான HRANA, ஏப்ரல் 7-ஆம் திகதி நிலவரப்படி குறைந்தது 1,701 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 254 சிறுவர்கள் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு
மேலும், இராணுவத் தரப்பில் 1,221 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்ற 714 பேரின் விபரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரானில் தற்போது நிலவும் கடுமையான போர் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, சர்வதேச ஊடகங்கள் அங்கு செய்தி சேகரிக்கச் செல்வதில் பெரும் சிக்கல்கள் நீடிக்கின்றன.

குறிப்பாக, வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு விசா மறுக்கப்படுவதால் கள நிலவரங்களைச் சரியாகக் கணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இணையச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் NetBlocks அமைப்பின் தகவல்படி, ஈரானில் இணையச் சேவை முடக்கப்பட்டு இன்றுடன் 41 நாட்கள் நிறைவடைகின்றன.
பேச்சுவார்த்தை
போர்க்கால பாதுகாப்புக் காரணங்களுக்காக இணையம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இது அந்நாட்டு மக்களின் தகவல் தொடர்பு உரிமையைப் பறிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததன் பேரில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த உடன்படிக்கையின் மூலம், ஹோர்முஸ் நீரிணையை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், லெபனான் எல்லைகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக இந்த அமைதி உடன்படிக்கை எந்த நேரத்திலும் முறிந்து போகக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.