பெரும் ஆபத்தில் உள்ள இடைக்கால உடன்படிக்கை! மீண்டும் ஈரானுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள பரஸ்பர தாக்குதல் அச்சுறுத்தல்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான இடைக்கால உடன்படிக்கை (MoU) தற்போது பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது.
சமீப நாட்களாக ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம்
இந்த நிலையில், ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, கத்தார் தலைநகர் டோஹாவில் செவ்வாய்க்கிழமை(01.07.2026) அன்று அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு இடையே ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்துத் தெரிவித்துள்ள ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி, இந்த வாரம் டோஹாவில் அமெரிக்கத் தரப்புடன் எந்தவித தொழில்நுட்பக் குழு கூட்டங்களும் திட்டமிடப்படவில்லை என கூறியுள்ளார்.

அதே நேரத்தில், கத்தார் நாட்டுடன் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடக்கத்தில் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்துப் பேசவே இந்த ஆலோசனைகள் திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தீவிரப் பதற்றம் காரணமாக, தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதே முதன்மை நோக்கமாக மாறியுள்ளது.
இடைக்கால உடன்படிக்கை
இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் முற்றிலும் மாறுபட்ட நிலப்பாடுகளைக் கொண்டுள்ளன.
இடைக்கால உடன்படிக்கையின்படி ஹோர்முஸ் நீரிணையைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளதாக ஈரான் வாதிடுகிறது.

ஆனால், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது என்றும், சர்வதேசக் கப்பல் போக்குவரத்து எந்தவித தடையுமின்றி சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்த எல்லைப் பகுதி மோதல்கள் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன என முன்னாள் அமெரிக்க தூதுவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.