குவைத், பஹ்ரைன் மீதான தாக்குதல் ‘தற்காப்பு நடவடிக்கையே- ஈரான்
குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தங்களின் சுய பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட "தற்காப்புத் தாக்குதல்கள்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியாகி, 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்த சூழலில், ஈரான் தரப்பிலிருந்து இந்த விளக்கம் வந்துள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ஈரானியப் படைகள் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏனெனில், அந்த இடங்களைத்தான் அமெரிக்கப் படைகள் சிவிலியன் கப்பல் போக்குவரத்தின் மீது தாக்குதல் நடத்தவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறவும் பயன்படுத்தி வருகின்றன. தடைகளாலும் போரினாலும் சாதிக்க முடியாத ஒன்றை, மேலும் ஒரு போரைக் கொண்டு வந்து சாதித்துவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதோ அல்லது ஈரானிய கடற்படை மீதோ எப்போதெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தத் தாக்குதல் எங்கிருந்து தொடங்கப்பட்டதோ அந்த இடத்தைக் குறிவைத்து ஈரானிய இராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, ஈரானின் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், தங்களின் மண்ணில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் மீது ஆக்கிரமிப்பு செய்ய அனுமதித்ததற்காகக் குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளது.
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்குப் புகலிடம் கொடுத்ததால், அங்குள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் விளைவுகளுக்கு இரு நாடுகளுமே "நேரடிப் பொறுப்பு" எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan