இஸ்ரேலிய தாக்குதலில் கடற்படை உளவுப்பிரிவு தலைவர் பலி! உறுதி செய்த ஈரான்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படை உளவுப்பிரிவு இயக்குநரகத்தின் தலைவரான பெஹ்னாம் ரெசாய் (Behnam Rezaei), இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் இன்று(3) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 26 அன்று ஈரான் மீதான வான்வழித் தாக்குதலில் ரெசாய் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) ஏற்கனவே அறிவித்திருந்தது.
வான்வழித் தாக்குதல்
பிராந்திய நாடுகள் குறித்த உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், பல்வேறு உளவு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் ரெசாய் முக்கியப் பங்காற்றியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மார்ச் 27 அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பல நாட்களுக்குப் பிறகு அவரது மரணத்தை IRGC உறுதி செய்துள்ளது.
இதேபோல், மார்ச் 26 அன்று நடத்தப்பட்ட அதே தாக்குதலில் IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டாங்சிரி (Alireza Tangsiri) கொல்லப்பட்டதையும் ஈரான் உறுதி செய்துள்ளது.
முக்கியத் தளபதி
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முற்றுகையிடும் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியவர் டாங்சிரி என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து ஈரானின் கடற்படைத் தலைமையகத்தை இலக்கு வைத்து நடத்திய இந்தத் தாக்குதல்கள், ஈரானின் தற்காப்பு மற்றும் உளவுத்துறைக் கட்டமைப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் மௌனம் காத்து வந்த ஈரான், தற்போது முக்கியத் தளபதிகளின் மரணத்தை வரிசையாக உறுதிப்படுத்தி வருகிறது.