மோதிக் கொள்ளும் வல்லரசு நாடுகள்.. அடுத்த கட்டத்திற்கு தயார்நிலையில் ஈரான்
அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முனைப்புக்களில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் இந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் உயிர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுடன் நிலவும் பதற்றத்தை குறைப்பதற்காக பிராந்திய நாடுகள் முன்வைத்துள்ள பல ராஜதந்திர முயற்சிகளை ஈரான் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஈரானின் திடீர் முடிவு
மேலும், பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான ஒரு கட்டமைப்பு எதிர்வரும் நாட்களில் உருவாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, ஈரான் மற்றும் அமெரிக்கா இரு தரப்பும் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலிலிருந்து பின்வாங்கும் போக்கைக் காட்டும் சூழலில் வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதம் ஈரானில் நடந்த பெரும் போராட்டங்களை அரசு கடுமையாக அடக்கியதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்பியிருந்தார்.
பின்னர், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஜூன் மாதம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து நிறுத்தப்பட்டன. அமெரிக்கா ஈரானுடன் பேசிக் கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
மறைமுக பேச்சுவார்த்தைகள்
இதனைத் தொடர்ந்து, மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி, உறுதிப்படுத்தினார்.
“பிராந்திய நாடுகள் செய்தி பரிமாற்றத்தில் நடுநிலையாளர்களாக செயல்படுகின்றன.
பல அம்சங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திற்குமான விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு இறுதிப்படுத்தப்பட்டு வருகிறது,” என அவர் கூறினார்.
வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் அண்மைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் ஜனாதிபதி பெசஷ்கியான் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும், இதற்கான திகதிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam