ஐ.நாவின் 20 ஊழியர்களை ஆதரவு படைகளால் சிறைபிடித்த ஈரான்
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஐ.நா. மையத்தில் இருந்து 20 ஊழியர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹவுதிகள் வசம் தற்போது ஐந்து யேமன் நாட்டவர்களும் 15 சர்வதேச ஊழியர்களும் சிக்கியுள்ளனர், ஆனால் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்குப் பின்னர் மேலும் 11 பேரை விடுவித்துள்ளனர்.
இந்த கடுமையான சூழ்நிலையை விரைவாக தீர்க்க ஹவுதிகள் மற்றும் பிற தரப்பினருடன் அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து ஊழியர்களும் விடுவிக்கப்படவும், சனாவில் உள்ள அதன் வசதிகள் மீது முழு கட்டுப்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலர் கைது
ஹவுதிகள் அந்த வசதியிலிருந்து தொலைபேசிகள், சர்வர்கள் மற்றும் கணினிகள் உட்பட அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் பறிமுதல் செய்ததாக இன்னொரு ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளார்.
சனா, கடலோர நகரமான ஹொடைடா மற்றும் சாடா மாகாணத்தில் உள்ள ஹவுதிகளின் கோட்டை உள்ளிட்ட, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பணிபுரியும் சர்வதேச அமைப்புகளுக்கு எதிராக ஹவுதிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஈரான் ஆதரவு ஹவுதிகளால் இதுவரை 50க்கும் மேற்பட்ட ஐ.நா. ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்கள் மற்றும் பிற சர்வதேச குழுக்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுடன் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் உளவாளிகள் என்றே ஹவுதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், ஐ.நா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஜனவரி மாதம் எட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சாடாவில் ஐ.நா. தனது நடவடிக்கைகளை நிறுத்தியது. மேலும், அதன் உயர்மட்ட மனிதாபிமான ஒருங்கிணைப்பாளரை சனாவில் இருந்து கடலோர நகரமான ஏடனுக்கு மாற்றியது.




