மீண்டும் பரபரப்பாகும் மத்திய கிழக்கு - ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் அதிரடி அறிவிப்பு
உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு மூடவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக லெபனானில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீவிரமடைந்துள்ள பதற்றம்
இந்த சம்பவத்தையடுத்து, பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடும் அதிரடி முடிவை ஈரான் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பின்னணியில் ஈரான் அதிகாரிகளுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் இன்று (21) சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
இந்த புதிய பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் பங்கேற்பதற்காக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரும் சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்று (21) சுவிட்சர்லாந்தில் தொடங்கவிருக்கின்றன.
இருப்பினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டிற்கு வரத்தவறினால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா சுங்க வரிகளை விதிக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கப்பல்கள் குறிவைக்கப்படலாம்
ஈரானிய புரட்சிகர காவலர் படையும், ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் செல்லும் கப்பல்கள் அதன் வழியாகச் செல்ல வேண்டாம் என்றும், உத்தரவுகள் இல்லாமல் செல்லும் கப்பல்கள் நீர் குண்டுகள் அல்லது கடற்படைப் படைகளால் குறிவைக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கடற்படைப் போக்குவரத்து தொடர்வதாகக் கூறி, அமெரிக்க மத்திய தலைமையகம் இந்த அறிக்கையை மறுத்துள்ளது.
மேலும், நேற்று மட்டும் 55 வர்த்தகக் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்று, 17 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.