ஐபிஎல் வெற்றி விழா :11 பேரின் பலிக்கு யார் காரணம் - அறிக்கை வெளியானது..
2025 ஐபிஎல் கிண்ண வெற்றி விழாவின்போது, பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட சன நெரிசலில், 11 பேர் பலியானமைக்கு, ரோயல் செல்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழு, குறித்த குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கை கர்நாடக முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு அவசரமாக ஏற்பாடு
அறிக்கையின்படி, ஆர்.சி.பி என்ற ரோயல் செல்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகம், நிகழ்ச்சியை நடத்திய டி.என்.ஏ., நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சம்மேளனம் என்பன இந்த அனர்த்தத்துக்கு நேரடி காரணம் என்று விசாரணைக் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
குறுகிய காலத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று தெரிந்திருந்தும், இந்த அனர்த்தத்துக்கு காரணமானவர்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
விரிவான பொலிஸ் பாதுகாப்பும் மேற்கொள்ளப்படவில்லை. நிகழ்வின்போது மைதானத்திற்குள் வெறும் 79 பொலிஸார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நோயாளர் வாகன வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. இந்தநிலையிலேயே 2025 ஜூன் 4ஆம் திகதியன்று பிற்பகல் 3:25 மணிக்கு சன நெரிசல் ஏற்பட்டு 11 பேர் கொல்லப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆர்பிசி அணியின் வீரர் விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதற்காகவே, குறித்த நிகழ்வு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக சாட்சியம் அளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
