நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விசேட வழிபாடுகள்(Video)
தமிழ் சித்தரை புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட வழிப்பாடுகளுடன் சிறப்பான அபிஷேக பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று (14.04.2023) முருகப் பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
விசேட அபிஷேக ஆராதனைகள்
இதேவேளை வண்ணையம்பதி வேங்கட வரதராஜப்பெருமாள் ஆலயத்திலும் விசேட அபிஷேக ஆராதனைகள்
இடம்பெற்றுள்ளன.
இந்த சிறப்பு வழிபாடுகள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடாத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார்.
இதன்போது பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றுள்ளனர்.
துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயம்
யாழ். துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சோபகிருது வருட பிறப்பு பூஜைகள் மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளன.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் சிவாச்சாரியார்களால் சிறப்பு புது வருட பூஜைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 11: 30 மணியளவில் ஆரம்பமான பூஜை பொங்கல் மற்றும் அபிஷேக பூஜைகளுடன் இடம் பெற்றன.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியார்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி-எரிமலை
வவுனியா
வவுனியாவில் தமிழ் சித்திரைப் புத்தாண்டு வழிபாடும், தேர் திருவிழாவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா - வைரபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் திருக்கோவிலில் ஆலய பிரதம குரு மயூரசர்மா குருக்கள் தலைமையில் புத்தாண்டை முன்னிட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், ஆலயத் தேர்திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஆலய தேர்திருவிழா
பக்தர்கள் புடைசூழ மங்கள வாத்தியங்கள் முழங்க ஆதி விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து அதனைத் தொடர்ந்து வெளிவீதிக்கு வருகை தந்து தேரில் உலா வந்து பக்த அடியார்களுக்கு அருள் பாலித்துள்ளார்.
இதன்போது பக்த அடியார்கள் காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.
செய்தி - திலீபன்
மட்டக்களப்பு
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.
சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகளும் நடைபெற்றுள்ளன.
விசேட பிராத்தனை
ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின் போது நாட்டில் துன்பம் நீங்கி நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிராத்தனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது சித்திரை புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி-குமார்
மன்னார் - திருக்கேதீஸ்வர ஆலயம்
தமிழ் சித்தரை புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் - திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று (14) மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
செய்தி-ஆஷிக்
மலையகம்
சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு நுவரெலியா - ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றன.
ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றள்ளது.
பூஜை வழிபாடுகளில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - மலைவஞ்ஜன்
























