கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது
இலக்க தகடு இன்றி சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது, பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, இரண்டு தோட்டக்களை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 மற்றும் 25 வயதான சந்தேக நபர்கள்

அக்குரெஸ்ஸ, கல்வல பிரதேசத்தில் இலக்க தகடு இல்லாத ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்று செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் அதனை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கல்கட்டாஸ் ரக துப்பாக்கி, ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் இரண்டு தோட்டக்களை கைப்பற்றியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து 16 மற்றும் 25 வயதான சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இமதுவ, அங்குலுகஹா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
நகைக்கடை ஒன்றில் 8 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை

இந்த சந்தேக நபர்கள் கடந்த நவம்பர் 18 ஆம் திகதி மாலை அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றுக்குள் சென்று , அதன் முகாமையாளரின் முகத்தில் மிளகாய் தூளை தூவி 8 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலிகள் அடங்கிய பெட்டியை கொள்ளையிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam