வீதியில் மோதிக் கொண்ட பொலிஸார்! உயர் அதிகாரி வெளிப்படுத்தும் தகவல்
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரக்காபொல பிரதேசத்தில் பொலிஸாரின் இரு பிரிவினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஒழுக்காற்று சட்டத்தின் கீழ் ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மோதலின் பின்னர் மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து, அவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் நேற்று இரவு வீதியில் வைத்து இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் போக்குவரத்துப் பொறுப்பதிகாரி ஒருவரும் ரம்புக்கனையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் சிவில் உடையில் இருந்ததால் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.