பிரதமரின் உத்தரவை புறக்கணித்து செயற்பட்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தொடர்பில் உடனடி விசாரணை
செய்திதாள்களின் ஆசிரியர்கள் உள்ளிட்ட செய்தியாளர்களை விசாரிக்கக்கூடாது என்ற உத்தரவை, புறக்கணித்து செயற்பட்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, காவல்துறைமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், வெள்ளைப் பூண்டு மோசடி தொடர்பான விசாரணைகளை பேலியகொட சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு, அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ளைப் பூண்டு ஊழலை ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய செய்தியாளர்களை குற்றப்புலனாய்வுத் துறைக்கு அழைக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அமைச்சரவை பேச்சாளர், டலஸ் அழகப்பெருமவும், அமைச்சர் சரத் வீரசேகரவும், ஊடக நிறுவனங்களுக்குச் சென்ற சம்பவம் குறித்து, குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரிக்க மாட்டார்கள் என்று உறுதியளித்திருந்தனர்.
இருப்பினும், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழு இன்று புதன்கிழமை லங்காதீப தலையமையகத்திற்கு சென்று செய்தியாளர்கள் மற்றும் செய்தி ஆசிரியரின், வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.