காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணை செலவுகளுக்கு 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு ஆதரவு கோரிய காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், குடும்பங்களுக்கான உதவிகளையும் விசாரணைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு நேற்று(23) ஆளுநர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்
இந்த ஊடக சந்திப்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா, மிராக் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள், வழமையாக ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச ரீதியாக கடைப்பிடிக்கப்படும் இந்த தினம், இந்தமுறை யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 25ஆம் திகதி கடைப்பிடிக்கப்படவுள்ளது.

கடந்த வருடங்களில் இந்த நிகழ்வு அலரி மாளிகையிலும் கம்பனித்தெரு ஞாபகார்த்த மண்டபத்திலும் நடைபெற்றிருந்தன. இந்தமுறை நாங்கள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை கடைப்பிடிக்கவுள்ளோம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 'எமக்குக் கிடைக்கப்பெற்ற 23,352 விண்ணப்பங்களில், முப்படையினர் மற்றும் இரட்டிப்பான விண்ணப்பங்களைத் தவிர்த்து 16,966 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் இதுவரை 9,819 முறைப்பாடுகளுக்குரிய பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. மேலதிக விசாரணைகளுக்காகக் கோரப்பட்ட சுமார் 2,000 விண்ணப்பங்கள் எமது தலைமை அலுவலகத்தில் உள்ள தேடுதல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இடைக்கால நிவாரணம்
இவற்றில் ஏறத்தாழ 800 விண்ணப்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கடிதங்கள் மூலம் அனுப்பி விவரங்கள் தேடப்பட்டு வருகின்றன.
அதேவேளை, எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை 31 பேரை நாம் நேரடியாகக் கண்டுபிடித்துள்ளோம்' எனத் தெரிவித்தனர்.

இடைக்கால நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 7,726 முறைப்பாடுகள் இழப்பீட்டு அலுவலகத்துக்குச் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், 5,540 விண்ணப்பதாரிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபா கொடுப்பனவானது இழப்பீடு அல்ல, அது காணாமல் போன ஆட்களில் தங்கியிருப்பவர்களுக்கான வாழ்வாதார உதவியாகும்.
உரிய இழப்பீட்டை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கமும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட குழுவொன்றை நியமித்துள்ளனர்.
375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
அந்தக்குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர் இழப்பீடு வழங்கும் முறை குறித்துத் தீர்மானிக்கப்படும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.

இதற்கான விசாரணைகள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக இந்த வருடம் 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசாங்க நியமனங்களுக்குத் தடை உள்ள நிலையிலும், பிரதமரின் செயலாளரின் விசேட அனுமதியுடன் எமது அலுவலகத்துக்கு 69 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைவாக தற்போது 47 பேர் சேவையில் இணைந்துள்ளதுடன், எஞ்சியோருக்கான நியமனங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வழங்கப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.
110 நாட்கள் அகழ்வுப் பணிகள்
இந்த ஊடக சந்திப்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்து தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 584 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மனித எச்சங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நோக்கில், அவர்களது உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபெருட்கள் தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்..