பிரித்தானியாவில் கடுமையான நெருக்கடி! - விசா விதிகளை எளிதாக்கும் அரசாங்கம்
பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு, உணவு தட்டுப்பாடு உள்ளிட்ட கடும் நெருக்கடிக்கு வழிவகுத்த கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க தற்காலிக விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த குறுகிய கால திட்டத்தில் 5,000 வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் விசா வழங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர்களின் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டு, மக்கள் நீண்ட வரிசைகள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை எனவும் மக்கள் இது குறித்து பீதியடைய தேவையில்லை எனவும் அரசாங்கம் கூறியுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பூர்த்தி செய்ய வேண்டுமானால் சுமார் 100,000 ஓட்டுனர்கள் தேவை என்று பிரித்தானியாவின் பாரவூர்திகள் சங்கத்தினர் (Road Haulage Association) தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் உள்ளிட்ட பல காரணிகளால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி மோசமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாவுக்கு தகுதியான வெளிநாட்டு ஓட்டுநர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மட்டுப்படுத்தப்படமாட்டார்கள் எனவும், பெரும்பாலான ஓட்டுநர்கள் ஐரோப்பாவிலிருந்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணவும், உடனடி பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவும் தற்காலிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் டவுனிங் வீதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும் நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது எனவும், எந்தப் பற்றாக்குறையும் ஏற்படவில்லை என பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, தற்காலிக விசாக்கள் "நல்ல யோசனை" என ஐரோப்பிய ஒன்றிய பாரவூர்திகள் சங்கத்தினர் (European Road Haulers Association) தெரிவித்துள்ளனர்.