தமிழர்களை மிரட்டும் கருத்துக்கள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன : க.துளசி
இனவாதியான சரத்வீரசேகரவின் தமிழ் மக்களை மிரட்டும் வகையிலான கருத்துக்களை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையதினம்(29.05.2023) இடம்பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்மையான கண்டிப்பு
இலங்கையில் இனப்படுகொலை செய்த படையினரை நினைவுகூரும் நினைவு தூபியில் தமிழர்களையும் நினைவு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
அனைத்து இனத்தவர்களும் நினைவு கூருவதற்கான பொதுவான நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு என தெரிவித்துள்ளார்.
பௌத்தர்கள் கையில் சட்டம்
இதேவேளை இவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
கடந்த ஐம்பது ஆண்டுகளாக கேள்விக்குட்படுத்தப்படும் இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு சரத்வீரசேகர கூறுவதைப்போல பௌத்தர்கள் சட்டத்தை புதிதாக கையில் எடுக்க வேண்டிய தேவையில்லை.
ஏற்கனவே ஆசியாவின் நூல் சுரங்கம் யாழ் நூலகத்தின் மீது உங்கள் தீக்குச்சி கொழுத்தி எறியப்பட்டதோ அப்போதே பௌத்தம் சட்டத்தை கையில் எடுத்து விட்டது.
வெலிக்கடையில் குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்ட போதும் முள்ளிவாய்காலில் வகைதொகையின்றி ஈழத்தமிழினம் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும் இலங்கையின் சட்டத்தை கையகபடுத்தியவர்கள் நீங்கள்தான்.
சிங்கள பேரினவாதத்தின் வக்கிர கோரதாண்டவம் ஆடும் அக்கினி குஞ்சுகள் நீங்கள்தான் என்பதை ஈழத்தமிழர்களும் சர்வதேச நாடுகளும் நன்கு அறியும்.
புதிய உலக ஒழுங்கில் நடாத்தப்பட்ட மிக மோசமான Biblioslasm நிகழ்த்தியவர்கள் நீங்கள்தான்.
சிங்கள பௌத்தம் தேரவாத மத அடிப்படைவாத சக்திகள் மற்றும் சிங்கள பெருந்தேசியவாத வாக்குகளால் உருவாக்கப்பட்ட இலங்கை அரசு இதில் கோட்டாபய அரசும் விதிவிலக்கல்ல.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் எந்த சிங்கள மக்கள் கோட்டாபயவை மற்றும் பொதுஜன பெரமுனவினரை யுத்த வெற்றி கதாநாயகர்களாகவும் சிங்கள இனத்தின் மீட்பர்களாக கருதினார்களோ அதே சிங்கள மக்களால் கோட்டபாய அரசு ஆட்சி அதிகாரத்திலிருந்து துரத்தி அடிக்கப்பட்டார்கள்.
முக்கியமான வாக்குறுதிகள்
நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்க வந்த மீட்பராக ரணில் விக்ரமசிங்கவும் உலக நாடுகளிடம் கடன்களை பெற்றுக்கொண்ட போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது.
தமிழ் மக்களிற்கான நிரந்தரமான அரசியல் தீர்வு, போர் குற்றவாளிகளிற்கு தண்டனை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் ஆனால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு மீண்டு வருகின்றதான வெளித் தோற்றப்பாடு காட்டப்படுகின்ற வேளையில், இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்களில் மிக வேகமான பௌத்த மயமாக்கல் மற்றும் வடகிழக்கு மாகாண வாழ் தமிழ் மக்களை அச்சுறுத்துவது போல் சிங்கள மத அடிப்படைவாத நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழ் மக்களுக்கு மிரட்டல்கள் விடப்படுகின்றன.
உதாரணமாக அண்மையில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச இராசபக்சே, வெளியுறவுத்துறை அமைச்சர் அலிசப்ரி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோரின் ஆசியை பெற்றுள்ள சரத் வீரசேகர என்பவர் இலங்கையில் வாழ்கின்ற அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றார்.
கலாநிதி சரத் வீரசேகர அவர்கள் நிபந்தனைகள் தொடர்ந்தால் சிங்களவர்கள் சட்டத்தை கையிலெடுக்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கையை தமிழ் மக்களை நோக்கி விட்டிருந்தார். இலங்கை தீவில் தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவிக்கும் அத்தனை துயரங்களிற்கும் காரணம்.
சிங்கள பௌத்த தேரவாத சிந்தனை கொண்ட அரசியலாகும். அதே அரசியல்தான் இலங்கையின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில். வீழ்த்தியது. ரஷ்யா உக்கிரைன் போரும் அதன் பின்னரான சர்வதேச அரசியல் மாற்றங்கள்.
இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதை இந்திய மத்திய அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள் மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
சிங்கள இனவாத அரசியல்
இலங்கை ஜனாதிபதி அவர்கள் ஒருபுறம் சர்வதேசத்திற்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டு மறுபுறம் சிங்கள பௌத்த பேரினவாதிகளையும் அவர்கள் சிங்கள இனவாத அரசியலையும் அனுமதிக்கிறாரா என்ற நியாயமான சந்தேகம் தமிழ் மக்களுக்கு எழாமல் இல்லை.
தொடர்ந்தும் பௌத்த பேரினவாத சக்திகள் தமிழ் மக்களின் வரலாற்று பூர்வீக நிலங்களையும் வணக்க ஸ்தலங்களையும் பௌத்த மதத்தின் பெயரால் ஆக்கிரமிப்பு செய்து தமிழ் மக்களின் இருப்பையும் அச்சுறுத்தும் விதமான இனவாத நடவடிக்கைகள் தொடர்ந்தால் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் ஒரு புதிய ஒழுங்கினை நோக்கி இந்தியா பயணிக்கிறது.
அந்த ஒழுங்கினை பற்றிக்கொள்ள வேண்டிய ஜதார்த்தமான தேவை ஈழத்தமிழர்களுக்கு எழும் தவிர்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளீர்கள்.
அப்படி பிராந்திய ஒழுங்கினை பற்றிக்கொள்ளும் ஈழத்தமிழர்கள் பயணிக்கும் போது எமது தேசிய இனத்திற்கு எதிராக நீங்கள் பற்ற வைத்த இன அழிப்பு நெருப்பிற்கும் மற்றைய எல்லா அக்கிரமங்களுக்கும் உலக அரங்கில் கை கட்டி சாட்சி சொல்ல வேண்டிவரும்.
அவ்வாறான இடர் மிகுந்த திருப்பத்திற்குள் சிங்கள தேசத்தை நீங்கள் தள்ளி செல்கின்றீர்கள் என்பதே காலத்தின் நிதர்சனமான உண்மையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி-ஷான்

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
