வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக போராடினார்! பகிரங்கமாக பேசிய டலஸ் (Video)
புதிய இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட நான்கு தலைவர்கள் நாட்டில் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னர் நான்கு பிரபுக்கள் குடும்பங்களை சேர்ந்தவர்களே நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளனர்.
சேனாநாயக்க குடும்பம், ஜெயவர்தன குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் மற்றும் ராஜபக்ச குடும்பம் என நான்கு அரசியல் பிரபுக்களின் குடும்பங்களே நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தன. இடையில் சில ஆண்டுகள் ரணசிங்க பிரேமதாச, டி.வி.விஜேதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய பிரபுத்துவ அரசியலில் இருந்து வராத கீழ் மட்டத்தை சேர்ந்தவர்கள் நாட்டை ஆட்சி செய்தனர்.
இந்த அரசியல் பிரபுக்களின் ஆட்சிக்கு எதிராக பிரபுக்கள் அற்றவர்களின் அரசியலுக்காகவே சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. பிரபுக்களின் அரசியலுக்கு எதிராக சிலர் கிளர்ந்து எழுந்தனர்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது என்ன நடந்தது, வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பிரபுக்கள் குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்துகொண்டனர்.
ஜெயவர்தன, ராஜபக்ச குடும்பங்கள் டலஸ் அழகபெருமவுக்கு எதிராக ஒரு முகாமில் இணைத்தனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியாது. நான் போட்டியிட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நான் குறிப்பிட்டது போல் வரலாற்றில் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள்.
பிரபுக்கள் அற்ற அரசியல் முன்னெடுப்பதற்காக கடந்த 50 ஆண்டுகளில் நான்கு பிரதான பாத்திரங்களை நாம் பார்த்திருக்கின்றோம். விஜயகுமாரதுங்க, ரோஹன விஜேவீர, ரணசிங்க பிரேமதாச, வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர்களின் அரசியலை நான் நியாயப்படுத்தவில்லை. எனினும் அவர்கள் பிரபுக்கள் அற்ற அரசியலுக்காக குரல் கொடுத்தனர்.
பிரபுக்கள் அற்ற அரசியலுக்காக குரல் கொடுத்த இந்த நான்கு பேரும் இறுதியில் வீதியில் கொலை செய்யப்பட்டனர்.
ஆனால், பிரபுக்கள் மக்களின் தோளின் மீது மிக கௌரவமாக மயாணத்தை நோக்கி சென்றனர். இதுதான் வரலாறு எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஒட்டு கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைகாட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என்று இந்த மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நாட்டில் கடந்த செவ்வாய்க் கிழமைக்கு பின் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.
எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது
அத்துடன், எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து என்ன நடக்கிறது என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
சர்வதேச நாணய நிதியத்தால் கூட அந்த பெரிய செயல்பாடுகளை கையாள முடியும் என்று நான் நினைக்கவில்லை. இதை வரலாறு பதிவு செய்யும்.
நீதி இல்லாத நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் மக்கள் அல்ல. அரசியல்வாதிகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி ஆதாரத்தை நிரூபிக்கும் ஆவணம் தேவையில்லை! இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு |