சஹ்ரானுக்கு எதிரான சர்வதேச பிடியாணை! 2018ஆம் ஆண்டிலேயே கிடைத்த புலனாய்வு அறிக்கை
பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் நான் அமைச்சராக பதவி வகித்த வேளையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார(R M Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
மேலும், 2018.05.17 மற்றும் 2018.05.19 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கமைய பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்வதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 2018.07.02ஆம் திகதி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொண்டனர். அத்துடன் சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சஹ்ரானுக்கு எதிரான நடவடிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நான் பதவி வகித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர ஆகியோர் குறிப்பிட்டது முற்றிலும் பொய்யானது.
2018.10.26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியை தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவியில் இருந்து நான் நீக்கபட்டேன். 52 நாள் அரசியல் நெருக்கடிகளின் போதும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நான் பதவி வகிக்கவில்லை.
பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் நான் அமைச்சராக பதவி வகித்த வேளையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2018.05.17 மற்றும் 2018.05.19 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கமைய பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்வதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 2018.07.02ஆம் திகதி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொண்டனர். அத்துடன் சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
2018.06.07ஆம் திகதி முதல் எனக்கு அரச புலனாய்வு பிரிவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிராக நாலக குமார என்ற நபர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து நாலக சில்வா இடைநிறுத்தப்பட்டார். நாலக சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. இவர் தற்போது விடுதலையாகியுள்ளார். ஆகவே இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும் சூழ்ச்சிகளில் ஒரு பகுதியாகும்.
இவ்வாறான நிலையில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட போது நான் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பரவும் குறிப்பிடுகிறார்கள். இவ்விருவரும் குண்டுதாக்குதல்தாரிகளே.
சிறையில் இருந்து வெளியில் வந்த நபர் தனது பெயரை மாற்றிக்கொள்வதை போன்றே மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசிய மக்கள் சக்தி என்று பெயர் மாற்றம் செய்துகொண்டு ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். ஜே.வி.பி.யினரது வரலாற்றை நாட்டு மக்கள் மறக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |